வியாழன், 20 செப்டம்பர், 2012

“எங்களை நம்புங்கள்“ யாழ்.ஆயரிடம் அமெரிக்கத் தூதர் உறுதி மொழி

எங்களை நம்புங்கள், நாங்கள் எங்களால் முடிந்தளவு அழுத்தத்தை இலங்கை அரசு மீது பிரயோகிக்கின்றோம். இலங்கை அரசின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று தெரியாத நிலையில் இருக்கின்றோம்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பிலும், அரசியல் தீர்வு வழங்கப்படாமை தொடர்பிலும் நாங்கள் இன்னமும் வலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்றுள்ள மிச்சேல் ஜே.சிசன் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கூறினார்.
இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நேற்றையதினம் யாழ். மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார்.
நேற்றுக்காலை, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர் அதன் பின்னர் யாழ். பொது நூலகத்தைச் சென்று பார்வையிட்டார். அத்துடன் நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்புச் செய்தார். தொடர்ந்து மாலை யாழ். முஸ்லிம் சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் தனது பயணத்தின் இறுதியில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற சந்திப்பின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த யாழ். ஆயர்:
புதிய தூதுவராகப் பதவியேற்ற பின்னர் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இங்குள்ள பிரச்சினைகள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பிலான அழுத்தங்கள் உட்பட சகலவற்றையும் அறிந்தவராகவே உள்ளார். தான் இலங்கை வந்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை விரும்பிய இடங்களுக்குச் சென்று உண்மை நிலவரங்களை நேரில் பார்த்து அறியுமாறு தெரிவித்திருந்தார்.
அதற்கமையவேதான் யாழ்ப்பாணம் வந்ததாகவும், இரண்டு நாள்களும் யாழ்ப்பாணத்தைப் பார்த்த பின்னர் இங்கு எவ்வளவோ முன்னேற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதை உணர்வதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
போர் முடிந்த நிலையில் இங்கு நிறைய செய்யப்பட வேண்டியிருக்கிறது. நாங்கள் யு.எஸ்.எயிட் நிறுவனத்தினூடாக எதிர்வரும் காலங்களில் மிகச் சிறிய வேலைத் திட்டங்களையே முன்னெடுக்கவுள்ளதாக அவர் என்னினும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் இது தொடர்பில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்கின்றது.
காலத்தைக் கடத்தப் பார்க்கின்றது. எங்களுக்கு இலங்கை அரசின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருப்பதாக தூதுவர் கவலையுடன் என்னிடம் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்குப் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருகின்றனர், செல்கின்றனர். நாங்களும் இங்குள்ள நிலைமையை சொல்கின்றோம். ஆனால் இலங்கை அரசுக்குக் கொடுக்கும் அழுத்தம் காணாமல் இருப்பதாக நான் அவரிடம் தெரிவித்தேன்.
அதற்கு அவர், எங்களை நம்புங்கள். நாங்கள் எங்களால் இயலுமான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குவோம் என உறுதியளித்தார். என்று யாழ்.ஆயர் தெரிவித்தார்

1 கருத்து: