சனி, 26 மே, 2012

காணாமல் போன தமரா குணநாயகம்!

கியூபாவுக்கு இடமாற்றப்பட்ட தமரா குணநாயகத்தின் பதிலை காணவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருந்த தமரா குணநாயகத்திற்கு தண்டனை இடமாற்றமாக கியூபாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அப்பதவியை இன்னும் ஏற்றுக்கொள்வோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்றும் அவரின் பதிலை காணவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருமதி தமரா குணநாயகத்தின் புதிய சுயவிபரக்கோவையை கோரிய வெளிவிவகார அமைச்சு இதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
‘அவருக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. அமைச்சினால் வழங்கப்பட்ட பதவியை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது. அது அவரைப் பொறுத்த விடயம். ஆனால் அமைச்சு ஏற்கெனவே மேற்கொண்ட தீர்மானத்தின்படி செயற்படும். அதில் மாற்றமில்லை’ என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தண்டனை நிலையத்திற்கு’ தான் இடமாற்றப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடந்த முதலாம் திகதி தமரா குணநாயகம் கடிதமொன்றை எழுதியிருந்தார். ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக தான் ஏன் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் என்பதை அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராக பதவி வகித்த ரவிநாத ஆரியசிங்க, ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜூலை முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக