ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மாணவி மரணம்: டில்லியில் பதற்றம், பொலிஸ் குவிப்பு, முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களை மூடி பாதுகாப்பு! சோனியா அறிக்கை..

News Serviceடில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர், காங்., தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் என பல தரப்பினரும இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று சோனியா டி.விக்கு அளித்த பேட்டியில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவோம் என்றார். மாணவியின் உடல் போஸ்‌ட்மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. இவரது சொந்த ஊரான உத்திரபிர‌தேசம் கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. ஜந்தர்மந்தரில் கூடிய போராட்டக்காரர்களை சந்திக்கும் ‌எண்ணத்தில் டில்லி முதல்வர் ஷீலாதீட்ஷித் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை மறித்து திருப்பி அனுப்பினர்.
கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் , ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர். இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார்.செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் ,அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக