கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணசபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம்.தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சென்றதே தவிர, நாங்கள் இதில் இருந்து நழுவிச்செல்லவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனீவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ளமுடியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக