வெள்ளி, 28 செப்டம்பர், 2012

மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் இனவாதமற்ற பிரசாரங்களுக்கு வெற்றி * சிங்களப் பிரதேசங்களில் ஐ.தே.க இனவாதம் * இலங்கையின் ஒருமைப்பாட்டை யாரும் சீரழிக்க முடியாது * வரட்சியை அரசியலாக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


மூன்று மாகாணசபை தேர்தல் பிரசாரங்களின் போதும் இனவாதத்தை எவரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான நிபந்தனையை நான் எனது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு விதித்திருந்தேன்.
அதனால் இந்த பிரசாரங்களின் போது நாம் சிங்கள இனவாதத்திற்கு இடமளிக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாடிய போது அறிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த ஒருவர், உங்களுடைய இந்த கொள்கைக்கு நேர்மாறான கொள்கையை கடைப்பிடித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவ்விதம் கிழக்கு மாகாணத்தின் அரசாங்க கட்சியில் சேர்த்துக் கொண்டீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் தனியாக போட்டியிட்டாலும் அதன் தலைவர் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கிறார். இதனால் எங்களுக்கு இடையில் கொள்கை அளவில் எவ்வித முரண்பாடும் இல்லை. நீங்கள் இவ்விதம் கேள்வி எழுப்புகிaர்கள். ஆனால், எனது அமைச்சரவையிலேயே உறுப்பினர்களிடையே கருத்து மோதல்கள் இருக்கின்றன.
நான் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மஹிந்த சிந்தனை கொள்கை அடிப்படையில் நடை முறைப்படுத்துவதற்கு எங்கள் மத்தியில் பூரண உடன்பாடு இருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இவ்விதம் கருத்து தெரிவிக்கும் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் உங்களுடன் இணைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைத்திருக்கலாமே என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த ஜனாதிபதி;
அரசாங்கத்தின் கதவுகள் இரு பக்கமாக திறந்து மூடக்கூடியது. விரும்பியவர்கள் வரலாம். விரும்பாதவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். அதே கொள்கையை நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் கடைப்பிடிக்கிறோம் என்று சொன்னார்.
இலங்கை ஒருமைப்பாடுடைய ஒற்றையாட்சி தளைத்தோங்கும் ஒரு நாடாகும். இந்த நிலைப்பாட்டை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கக் கட்சி மாபெரும் வெற்றியடைவதற்கு இக்கட்சியின் வேட்பாளர்களுக்கு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பூரண ஆதரவை அளித்ததே பிரதான காரணமாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டிய போது குறுக்கீடு செய்த பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ,
கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் அன்று இருந்த போதிலும் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் அரசாங்கக் கட்சியை ஆதரித்தார்கள். அதனால் தான் இந்த வெற்றியை ஒரு மாபெரும் வெற்றி என்று கூறுகிறோம் என்றார்.ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குறிப்பாக அம்பாறையில் சிங்கள பேரினவாதத்தை தங்களின் பிரசாரத்திற்கான தொனிப்பொருளாக வைத்து தேர்தலை நடத்தியதென்று கண்டனம் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை என்று கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் குறுக்கீடு செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்போதுதான் ஒரே கட்சிக்குள் விருப்பு வாக்குகளுக்காக சண்டை சச்சரவும், பகைமையும், குத்து வெட்டுகளும், வன்முறைகளும் இடம்பெறுகின்றன என்றும் ஆரம்ப காலத்தில் தேர்தல்களின் போது அரசாங்கக்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் தான் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டன என்று கூறினார்.
அரசாங்கத்தைப் பார்த்து கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சியினருக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் அரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, வரட்சி கோரத்தாண்டவம் ஆடி, குடிக்கக் கூட நீர் இல்லாமல் மக்கள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த தேர்தலை நாம் நடத்தினோம். அப்படி இருந்தும் கூட எதிர்க்கட்சி இந்த மாகாணசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கைக்கு சான்று பகர்வதாகவும் ஜனாதிபதி கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் பேர்டி இராஜதந்திர பதவிகளை ஏற்கமாட்டார்
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க என்னுடைய நீண்டகால நண்பர். சில தினங்களுக்கு முன்னர் நான் அவருடைய இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினேன்.
அவர் ஒரு பண்பட்ட அரசியல்வாதி. அவர் வெற்றியையும், தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாடிய போது தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஜனாதிபதி அவர்களே, நீங்கள் அவருக்கு ராஜதந்திர பதவி ஒன்றை கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்ப யோசிக்கிaர்களா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, என்னுடைய நண்பன் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க ஒரு அரசியல்வாதி. அவர் ராஜதந்திர பதவியைப் பெற்று அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டார்.
அவர் தொடர்ந்தும் அரசியலில் இருந்து அவரது மக்களுக்கு தொண்டாற்றுவார் என்று கூறினார்.
முதலமைச்சர் பதவிக்கு எவ்விதம் ஒருவரை தெரிவு செய்கிaர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதியின் சார்பில் பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இது பற்றி தீர்மானிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டதென்றும், அக்குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்தத் தடவை ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் வடமத்திய மாகாணத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலும் முதலமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள் என்று பதிலளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த ஜனாதிபதி, இது விடயத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றும், தான் அவ்விதம் செய்திருந்தால் இது கட்சித்தலைவரின் தீர்மானம் என்று அதற்கான பொறுப்பை என் மீது என் கட்சியினர் சுமத்தியிருப்பார்கள்.
அதனால் நான் முன்யோசனையை கட்சி அங்கத்தவரிடமே ஒப்படைத்துவிட்டேன் என்று கூறினார்.
அடுத்துவரும் தேர்தல்களில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகள் பெற்றவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற நியதியில் இருந்து விலகி, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு நல்லவரை தெரிவு செய்து அவருக்கு அப்பதவியை வழங்குவோம் என்று ஜனாதிபதி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக