கிழக்கு மாகாண சபை குறித்து சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் அதேவேளை தவிர்க்க முடியாதவாறு ஆதரவை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையை மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் உருவாக்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக மகிந்த சிந்தனையின் ராஜதந்திர காய் நகர்த்தல்களை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல் ஒன்று குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளின்படி மாகாண சபையில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் தெளிவான பெருபான்மை கிடைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான 12 பேருடன் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்றுள்ளதால் 14 ஆசனங்களை ஆளும் அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இதனால் முதலமைச்சரை தெரிவுசெய்து ஆட்சியமைக்குமாறு அதிக ஆசனங்களை கைப்பற்றிய கட்சிக்கே மாகாண ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைப்பதற்காக இவ்வாறு இந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த 4 உறுப்பினர்களை அதிக விலை கொடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்படி வற்புறுத்தி உள்ளதாகவும் அதற்கு அவர்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதியின் உற்ற நண்பரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டாயம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவூவ்ஹக்கீம் பாரிய இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
காரணம் கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல் முஸ்லீம்காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க இணங்கிய மூவரை அரசாங்கம் உடைத்தெடுக்காது. இல்லை நிபந்தனை விதிக்க முற்பட்டால் முஸ்லீம் காங்கிரசில் இருந்து உதிரிகளாக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அரசாங்கம் மாகாண ஆட்சியைக் கைப்பற்றும். அத்தகய நிலை ஏற்பட்டால் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சுப்பொறுப்புக்களை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசாங்கம் கூறும். இவ்வாறான சூழல் உருவாகினால் கட்சியின் பாராளுமன்ற அமைச்சர்கள் சிலரும் கூட உதிரிகளாக அரசாங்கத்துடன் இணைவர். அவ்வாறாயின் கட்சிக்குள் பாரிய உடைவு ஏற்படும். இவ்வாறான நிலையினையே முன்னைய பாராளுமன்ற தேர்தலிலும் உருவாக்கி கட்சியின் சிதைவை தடுக்க கடுமையான அழுத்தங்களிடையே ஹக்கீம் அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தார். அப்போது ஐக்கியதேசியக் கட்சியின் நெருங்கிய நண்பர்களிடம் சொறிகேட்டார் ஹக்கீம்.
இதே வகையான சூழலையும் அழுத்தங்களையுமே தற்போதும் மகிந்தராஜபக்ஸ சகோதரர்கள் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமின் மீது ஏற்படுத்தி உள்ளார்கள்.
அதனால் அமைச்சரும் முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார். ஆனால் இப்போது சொறிகேட்கப் போவது ஐக்கியதேசியக் கட்சியிடம் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அல்ல தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான இராஜவரோதயம் சம்பந்தனிடம் மட்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக