செவ்வாய், 30 அக்டோபர், 2012

முகாம் அமைக்கும் படையினரின் வானகம் விபத்து 10 படையினர் படுகாயம்

காரைநகரில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து படை முகாம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினர் பயணம் செய்த வாகனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அண்மையில் பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தின் போது அதில் பயணம் செய்த பத்து சிங்களப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு படையினரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக படையினரும் யாழ். போதனா மருத்துவமனை வைத்தியர்களும் தெரிவித்துள்ளகனர்.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் தற்போது குடாநாட்டின் பல இடங்களிலும் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரித்து நிரந்தர படைமுகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக இதுவரை காலமும் சிறிலங்கா கடற்படையின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த காரைநகர் பிரதேசத்திலும் தற்போது படையினர் முகாம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைநகர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியிலும் இங்கு ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளிலும் நிரந்தரமாகப் படை முகாம் அமைக்கும் செயற்பாட்டில் படையினர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக இராணுவத்தின் உடுவில் பிரிகேட் தலைமையகத்திலிருந்து கட்டடப் பொருட்களும் உபகரணங்களும் காரைநகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நேற்று திங்கட்கிழமையும் இவ்வாறு பொருட்களைக் கொண்டு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இராணுவ வாகனமே மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அண்மையில் வீதியில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன் அதில் பயணித்த 10 படையினர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் அம்புலன்ஸ் வாகனம் மூலமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் கவலைக்கிடமாக இருந்த இரண்டு இராணுவத்தினர் பின்னர் பலாலி படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த வாகனமும் வட்டுக்;கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக