வன்னியினில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு அவருக்கு இன்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த நிலையில் அவரது வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வருகை தரவுள்ளதாக பொலிஸ் தரப்பினால் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
எனினும் மாலை வரை அவ்வாறு எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.
ஏற்கனவே புலம்பெயர் தேசத்து வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பில் சிறீதரன் 4ம் மாடியில் கடந்த ஜீன் மாதமளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த செவ்வியின் மூலப்பிரதி கிடைக்காமையினால் அவ்விசாரணை பின்னர் பிசுபிசுத்துப் போயிருந்தது. இந்நிலையில் தற்போது பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பில் அவர் விசாரணைகளை எதிர் கொண்டுள்ளார்.
இதனிடையே குடாநாட்டு நாளிதழ்கள் இரண்டு தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பிரசுரித்துள்ளதாக கூறி இராணுவத்தளபதி தலா 100 மில்லியன் மான நஸ்டம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக