செவ்வாய், 6 நவம்பர், 2012

நீதியரசருக்கு ஆதரவு அரசுக்கு அழுத்தம்- தேரர்கள் மற்றும் பங்காளிகள் போர்க்கொடி - ஹெல உறுமய, திஸ்ஸ விதாரண தரப்பு கைச்சாத்திட மறுப்பு

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆளுந் தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் குற்றவியல் பிரேரணைக்கு எதிராக மகாநாயக்க தேரர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியமான சில பங்காளிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனால் குறித்த பிரேரணை விவகாரத்தில் அரசுக்குத் தற்போது பெரும் நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன என்று அறியமுடிகின்றது. சர்வதேச சமூகமும் இது விடயத்தில் அரசுக்கு எதிராக நிற்பதால் பிரேரணை விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை கொண்டுவரும் முடிவை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டுமென மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர். கண்டி மல்வத்த பீடத்தின் பீடாதிபதியும், அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதியுமே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அத்துடன், பிரதம நீதியரசருக்கு எதிரான விடயத்தில் தாம் பங்காளியாக இருக்கப்போவதில்லை என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையமசமாஜக்கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அரசியற் குழுக் கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இது விடயத்தில் மேலும் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

அதேவேளை, ஆளுந்தரப்பின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பிக்கள் எவரும் நீதியரசருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிடவில்லை.

எனினும், அரசியல் குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா , இல்லையா என்பது குறித்து அக்கட்சி தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய உறுப்பினரொருவரிடம் "சுடர் ஒளி' தொடர்புகொண்டு கேட்டபோது, ""கணிசமான அளவு கையொப்பங்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணைக்கு கிடைத்துள்ளதன் காரணமாக எமது எம்.பிக்கள் கையொப்பமிடாமல் இருந்திருக்கலாமென மழுப்பல் போக்கில் பதிலளித்த அவர், குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எது எப்படி இருந்தபோதிலும் நியாயத்தின் பக்கம் எமது ஆதரவு இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக