ஞாயிறு, 23 டிசம்பர், 2012

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு களங்கம் கற்பிக்கச் சதி:-சுமந்திரன்

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நேர்மையான, தியாகமான அரசியலுக்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் உள்நாட்டுவாதிகளும் வெளிநாட்டு விஷமிகளும் அவருக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வது அர்த்தமற்ற செயலாகும் என யாழ் மாவட்ட பா.உ. சுமந்திரன் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் இராணுவப் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும், மற்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூறியுள்ளார், கூறிவருகின்றார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை உள்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இது சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு சேறு பூசும் ஒரு விடயமாகும். அவரின் தியாகத்தனமான அரசியல் போக்கை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தலைவர் சம்பந்தன் கடந்தவாரம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அதைப்படித்தால் உண்மைநிலை புரியும்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி இனவிடுதலைக்காக போராடியுள்ளவர்களை பயங்கரவாதப் பட்டியைல் சேர்த்துக்கொண்டு அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் அவ் அமைப்பின் மீது தடை விதித்தன. இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பென உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது என்ற இந்த உண்மைநிலையை இரா.சம்பந்தன் எடுத்துக்கூறினாரே தவிர, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்ற அர்த்தம்பட அவரது உரை இருக்கவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் அவ்வாறு கூறியது கிடையாது.

இதுபோலவே, இராணுவப் பிரசன்னம் வடக்கு கிழக்கில் குறைக்கப்படவேண்டும் என்று கோருகிறாரே தவிர, அது முற்றாக நீக்கப்படவேண்டும் என அவர் கோரவில்லை என்ற இன்னுமொரு குற்றச்சாட்டு இவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுப் பொருத்தமற்றதாகும்.

வடக்கில் 15 இராணுவப் படையணிகள் நிலைகொண்டுள்ளது. முழுநாட்டிலுமே 20 படையணிகள் உள்ளபோது, வடக்கில் மாத்திரமே 15 பிரிவுகள் நிலைகொண்டிருப்பது இந்நாட்டில் போர் இன்னமும் முடியவில்லை என்ற அர்த்தமா? எனவேதான் வடக்கில் மேலதிகமாக நிலைகொண்டிருக்கும் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்வுக்கு இப் பிரசன்னம் குந்தகமாக இருக்கின்றது என எடுத்துக்கூறி வருகின்றார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது.

அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக