சனி, 26 ஜனவரி, 2013

ஜெனீவா கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும்

2ஆம் இணைப்பு-  ஜெனீவா கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும்ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆலோசிக்க டெசோ அமைப்பின் கூட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத்தமிழர்களை கொல்வதற்கு காரணமாக இருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது தான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.

இந்தியாவிலே இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்றும் கூறியிருக்கின்றார்.

பேபி, யோகி புதுவை ரத்தினதுரை கதி என்ன?

சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா லண்டனில் இருந்து கண்ணன் நோர்வேயிலிருந்து சிவகணேசன் ஆகியோர் எனக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தனர். அதன்படி 2009 போர் முடிந்தவுடன் இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியம், யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை, பாலகுமாரன், இளம்பரிதி ஆகியோருடன் 18 ஆயிரம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடைய தற்போதையை நிலை என்ன என்று தெரியவில்லை. இது குறித்து யோகியின் மனைவி யோகரத்தினம் யோகி கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது ஈழக் கவிஞர் புதுவை ரத்தினதுரை எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும் ஒரு சிலர் அவர் சாகடிக்கப்பட்டு விட்டார் என்றும் சொல்கின்றனர். ஈழப் பிரச்சினையில் ஆர்வத்தோடு களப்பணியாற்றிய கவிஞர் ரத்தினதுரையின் உயிர் கேள்விக்குறியாக உள்ளது என்றெல்லாம் தெரிவித்து இதைப்பற்றி நான் வினா எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

20.01.2013 அன்று நான் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் எழுதிய நீண்ட கடிதத்தில் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் அத்துமீறல் மற்றும் அராஜக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை சபையின் கூட்டத் தொடர் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் இலங்கை அரசுக்கு எதிராக அப்போது தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழகத்தில் வாழும் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

இதைப்பற்றியெல்லாம் விரிவாக விவாதிடத்தான் எதிர்வரும் 4 ஆம் திகதி அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. நான் எழுதியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதித்து துன்பச் சூறாவளியில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நல்லொளி பரவிட நல்ல முடிவுகளை எடுப்போம்.இலங்கை தொடர்பான சில விவகாரங்களில் மத்திய அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இலங்கைப் படையினருக்கான இராணுவப் பயிற்சிகள் தொடரும் என இந்திய மத்திய அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு இதனையே பறைசாற்றி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1956ம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காக தமது கட்சி குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.மத்தியஸ்தமான நாடு என உலகிற்கு காண்பித்துக் கொள்ளும் நோக்கில் மத்திய அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய வலுவாக குரல் கொடுக்க வேண்டுமெண அவர் வலியுறுத்தியள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக