சனி, 19 ஜனவரி, 2013

அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன? எமக்குச் சீனா இருக்கிறது - கோதாபய

அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன? எமக்குச் சீனா இருக்கிறது - கோதாபய ராஜபக்ஷஅமெரிக்கா உதவாவிடின் தமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும் அந்த உதவிகளை சீனாவிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.. கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய கோதாபய ராஜபக்ஷ,இராணுவம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு விடுக்கக் கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் இலங்கை வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவது மாத்திரமே. அவ்வாறு அமெரிக்கா செய்தால் நாம் சீனாவிடம் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வோம். எமக்கு சீனா இருக்கிறது. அதில் எவ்விதப் சிக்கலும் இல்லை. அமெரிக்கா எந்தவொரு சந்தர்ப்பதிலும் எமக்கு ஆயுதங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

''அமெரிக்கா வழங்கிய பயிற்சிகளுக்கமைய, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் செயல்திட்டமொன்றுக்கு நான் அதிகாரியொருவரை நியமித்தேன். அந்த அதிகாரி போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கா அந்த அதிகாரியை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

எனினும், அந்த அதிகாரி அவ்வாறு போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லையெனவும், அவர் புனர்வாழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பாக செயல்பட்டவர் எனவும் நான் விளக்கமளித்தேன். இதன்பின்னர் அவர்கள் இதற்காக மன்னிப்புக் கோரினர். பிழையான தகவல்களின்படியே இந்தத் தவறு நடந்ததாக அவர்கள் எம்மிடம் பின்னர் தெரிவித்தனர்'' எனவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்கா பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் செயல்பட்டுவருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். அமெரிக்க இராஜதந்திரிகள் தன்னைச் சந்திக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஏன் தண்டனை வழங்கவில்லையெனக் கேள்வியெழுப்புகின்றனர்.

எனினும், தவறு செய்யாதவர்களை தண்டிக்க முடியாது எனவும், அவ்வாறு தண்டனை வழங்க ஒரு நடைமுறை இருக்கிறது எனவும் தான் அந்த அதிகாரிகளுக்குக் கூறுவதாக பாதுகாப்புச் செயலாளர் சொன்னார்.அத்துடன், ஷிராணி பண்டாரநாயக்க குற்றம் இழைத்ததாக இனங்காணப்பட்டு, குற்றப் பிரேரணைக் கொண்டுவந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். எனினும், பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணியை பதவி நீக்கியது அமெரிக்காவிற்கு தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் பிரேரணை மூலம் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட விதம் இலங்கையின் முதலீடுகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசேல் சீஸன் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக