இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் முதற் பயணியாக சென்று மத்தள விமான நிலைய பணிகளை ஆரம்பித்து வைத்தார். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிறைவடைந்துள்ளன.
இங்கு 3500 மீற்றர் நீளமும், 75 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை, விமான பாதை, டெக்ஸி வீதி, சரக்கு மற்றும் பயணிகள் விமான இறங்கு தளம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
உலகிலுள்ள மிகப்பெரிய விமானமான ஏயார் பஸ் 380 ரக விமானத்தைத் தரையிறக்கக் கூடிய வசதியும் இவ்விமான நிலையத்தில் உள்ளது. இங்கு பயணிகள் சேவை, பொதிகள் சேவை, சரக்குகளைக் கையாளும் சேவை என்பன இடம்பெறவிருக்கிறது.
இரண்டாயிரம் ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீ-லங்கன் கார்கோவுக்கு 5000 சதுர மீற்றர் பரப்பைக் கொண்ட 60,000 மெற்றிக் தொன் சரக்குகளைக் கையாளக் கூடிய வசதியும் உள்ளது. முதற்கட்டமாக இவ்விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் ரியாத்துக்கும், நான்கு விமானங்கள் மாலைக்கும், இரண்டு விமானங்கள் பீஜிங்குக்கும், ஒன்று சங்காய் ஊடாக பேங்கொக்குக்கும் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.
இரண்டு மிஹின் லங்கா விமானங்கள் புத்தகாயாவுக்கு சேவையில் ஈடுபடும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்விமான நிலையத்தின் ஊடாக சேவையில் ஈடுபடும் A 300, A 320 A 330 A 340 ரக ஏயார் பஸ் விமானங்களுக்கும் போயிங்க் 737 விமானங்களுக்கும் ஸ்ரீலங்கன் இன்ஜினியங்க் நிறுவனம் தொழில்நுட்ப பராமரிப்பு சேவைகளை வழங்கும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை வரலாற்றில் திறந்து வைக்கப்பட்டவுடனேயே சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்துடன் செயற்படும் விமான நிலையமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், விளங்குவதாகவும் அவர் கூறினார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை வரை அதிசொகுசு பஸ் சேவையொன்று இன்று 18ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட விருக்கின்றது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் முதற்கட்டமாக பத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அதிகாரியொருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக