வியாழன், 14 மார்ச், 2013

வடக்கில் மனித உரிமைகளைப் பேணப் போவதாக அரசாங்கம் தகவல்களை கசியவிட்டுள்ளது

வடக்கில் மனித உரிமைகளைப் பேணவும் அவற்றின் அமுலாக்கலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கமே தகவல்களை கசியவிட்டுள்ளது.

வடக்கில் மனித உரிமைகளைப் பேணப் போவதாக அரசாங்கம் தகவல்களை கசியவிட்டுள்ளது:-இதற்காக வடபிரதேசங்கள் தோறும் மூத்த சிவில் சமூகப் பிரதிநிதிகளை இணைத்து மனிதவுரிமைகளை பாதுகாக்க மேலதிக உபகுழுக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசின் முகவர்களினால் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் நிபுணர்குழுவினர் வடக்குக்கு நேரடியாக விஜயம் செய்ய நேரிட்டால் மனித உரிமைகள் நிலவரத்தை நல்லமுறையில் பேணுவதாக காட்டவே இந்த முன் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உபகுழுக்களை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ரி.ஈ.ஆனந்தராசா தனித்தனியே சந்தித்துக் கலந்துரையாட உள்ளதாக ஆணைக்குழுவின் யாழ். காரியாலய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நடைபெறும் கிளிநொச்சி மாவட்ட உபகுழுவுடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆணையாளர் 21 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

மனித உரிமையை எவ்வாறு மேம்படுத்தலாம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெறும் இந்தச் சந்திப்புக்களில் மனித உரிமைகளின் அடிப்படைத்தன்மை தொடர்பான கருத்தரங்கொன்றும் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். காரியாலயத்தில் நடைபெறும் யாழ். மாவட்ட சிவில் சமூக உபகுழுவினருடனான சந்திப்பில் ஆணையாளர் ஆனந்தராஜா கலந்துகொள்ளவுள்ளார். இதில் யாழ். மாவட்டத்தில் மனித உரிமை சம்பந்தமான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது. இந்தச் சந்திப்பில் அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதுடன் அரச நிர்வாகம் தொடர்பான உரிமை மீறல்கள் தொடர்பிலும் கலந்து ரையாடப்பட உள்ளதாகவும் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

எனினும் பெயரளவில் இந்த மாவட்ட சிவில் சமூக உபகுழுக்களும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே செயற்பட்டுவருவதாக பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக