வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் கசியத்தொடங்கியுள்ள நிலையில் சுதந்திரக்கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னாள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.விக்கினராஜாவை முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதற்கு அவர் இணங்கியுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதனை உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், உள்ளிட்ட பலரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் வடக்கில் பொதுசன ஜக்கிய முன்னணியின் வேட்பாளராக மக்களிடையே ஆதரவு மிக்க நபரொருவரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முனைப்பு காட்டியபோதும் பின்னர் அவர் பின்வாங்கி கொண்டதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பு சார்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலைப்படுத்தப்படுவதை அடுத்து சுதந்திரக்கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னாள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.விக்கினராஜாவை முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
இதனிடையே முன்னாள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.விக்கினராஜாவிற்கு மக்களிடமுள்ள ஆதரவு பற்றி அறிக்கை சமர்ப்பிக்க புலனாய்வு பிரிவினரிற்கு அரச மேல் மட்டம் பணிப்புரை விடுத்துள்ளது. எனினும் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதனை முடக்கினார் என நிலவும் குற்றச்சாட்டு மற்றும் பிரபல தங்க நகை வர்த்தகர் ஒருவரிடம் களவு போன நகைகள் மீட்கப்பட்டு நீதிமன்றில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருந்த நிலையில் சூறையாடப்பட்டமைக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான பல விடயங்கள் எதிராக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் தற்போது சட்டத்தரணியாக பணியாற்றிவரும் அவர் வடமாகாண ஆளுநரின் சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக