செவ்வாய், 21 மே, 2013

ஹெல உறுமயவின் பிரேரணைக்கு தலைசாய்க்கப் போவதில்லை: மலையக கட்சிகள் திட்டவட்டம்

தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்க்கதரிசமான நோக்கத்தோடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். அதனூடாக இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் அனுமதியோம். இனவாத கொள்கைகளுக்கு தலைசாய்க்கப்போவதில்லை என பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

அரசியல் அமைப்பு 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன மேற்கண்டவாறு தெரிவித்தன.



இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கான தீர்வுகளுக்காவும் ஏனையோரைப்போன்று சமவுரிமை உரித்துடையவர்களாக வாழ்வதற்கு எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். இந்த உண்மையை மறைத்து இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று எவராலும் கூறிவிடமுடியாது என்றும் மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன.

முத்து சிவலிங்கம்

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறுகையில்,

அரசியல் அமைப்பி்ன் 13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு மாறாதாததாகும். 13 ஆவது திருத்தத்தையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையும் நாம் பூரணமாக ஏற்றுக்கொள்வதால் அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பது எமது நோக்கமாகும்.

இவ் விவகாரம் தொடர்பில் சிறுபான்மைக்கட்சிகள் இணைந்து பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன. இந்த குழுவும் அமைச்சர்களும் அடங்கியிருந்தனர். இக்கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் 13 வது திருத்தத்தின் அவசியம் குறித்து ஒரே நிலைப்பாட்டில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவோ அல்லது அதற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விடயங்களுக்கு ஆதரவாகவோ ஒருபோதும் செயற்படாது. அத்துடன் திருத்தச்சட்டம் உள்ளவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் அதில் மாற்றங்களும் தேவையில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் கூறுகையில்,

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது இந்நாட்டுக்கு அதுவும் தமிழ் மக்களுக்கு மிகமிக அவசியமாகும். ஆகவே அதற்கு எதிராக எத்தகைய நிலைப்பாடுகள் இருந்தாலும் அதனை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் அவர்களுக்கு விமோசனமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்க்கதரிசன அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ்காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜெ.ஆர்.ஜயவர்தனவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருநாட்டின் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் ஊடாக மாகாணங்களுக்கான அதிகாரம் உள்ளிட்ட விடயங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஜாதிக ஹெல உறுமயவினால் கொண்டுவரப்படவிருப்பதாக கூறப்படுகின்ற மேற்படி பிரேரனை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இழிவுபடுத்தும் ஒரு செயற்பாடாகும். அதற்கு நாம் துணைபோக தயாரில்லை. மேலும் தமி்ழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி 13 வது திருத்தச்சட்டமேயாகும். ஆகவே ஹெல உறுமயவின் வாதத்தை அல்லது அவர்களது நியாயத்தை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றார்.


இது குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் கூறுகையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள அரசாங்கம் நினைத்தால் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஏனெனில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் கடமைபட்டிருக்கின்றது. ஆகவே இந்த திருத்தத்தை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்.

இத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் ஹெல உறுமய போன்ற கட்சிகள் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதில்லை. எப்படியிருப்பினும் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை நாம் ஏற்கத்தயாரில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக