சிங்கள மக்களை மடையர்களாக்கி குடும்ப ஆட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவே ராஜபக்ஷ அரசு யுத்த வெற்றி விழாவை பெருமெடுப்புடன் கொண்டாடுகின்றது எனக் குற்றம்சாட்டும் ஜக்கிய சோஷலிஸக் கட்சி, யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, ராஜபக்ஷ அரசின் இந்தக் கபடதனத்தை அறிந்துகொண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராக தெற்கு மக்கள் வீதியில் இறங்கிப்போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்து எதிர் வரும் 19ம் திகதியுடன் நான்கு வருடங்களாகின்றபோதிலும், நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த பிரச்சினைக்குத் தீர்வு காணாது, அரசு மேலும் மேலும் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கின்றது என்று ஜக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். தமிழர்களுக்கு கடந்தகால கசப்பான சம்பவங்களை இந்த யுத்த வெற்றி விழா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் இதனால் தமிழர்கள் விரக்தியடைவர். அதேவேளை இந்த அரசுக்கு எதிராக தெற்கு மக்களும் வீதியில் இறங்கிப் போராடும் காலம் உதயமாகும். அந்தக் காலம் தொலைவில் இல்லையென்றே நாம் கருதுகின்றோம். என்று சிறிதுங்க கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக