தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தலைவரும், தற்போதைய பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் ஆயுதக் குழுவொன்றை இயக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'கருணா தரப்பினர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் எனக்கு பிரச்சினையில்லை'
'கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேறியமை எமக்கு சாதகமானதே எனினும், கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல நடவடிக்கைகளையும் இராணுவத்தினரே மேற்கொள்கின்றனர்.' என கோதபாய குறிப்பிட்டதாக குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்னிப் யுத்த முனையிலும் அரசாங்கப் படையினர் வெற்றியீட்டுவார்கள் என பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அப்போதைய அமெரிக்கத் தூதுவர் n;ராபர்ட் ஓ பிளக் தமது குறிப்பில் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருணா தரப்பினர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம்மைத் திட்டியதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதுவரிடம் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொப்பிகல பிரதேசத்தை படையினர் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் மட்டக்களப்பின் நிர்வாக நடவடிக்கைகளை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ளும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரிடம் பாதுகாப்பு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.' 'தமிழ் முஸ்லிம் காவல்துறை உத்தியோகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்' என அவர் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக