திங்கள், 23 செப்டம்பர், 2013

முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டும்-எம்.சி.எம்.இக்பால்

முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது - எம்.சி.எம். இக்பால்இலங்கையின் வட மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு மொத்தமாக 30 இடங்கள் கிடைத்துள்ளன.
இத்தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது.
அதிலும் குறிப்பாக ஆளும் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர்.
இதற்கு என்ன காரணம் என்று இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகள், மனித உரிமை விஷயங்கள் குறித்து எழுதிவரும் நெதர்லாந்திலுள்ள முன்னாள் அரச அதிகாரி எம் சி எம் இக்பால் கருத்து வெளியிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இடையே ஒற்றுமையின்மை மற்றும் கட்சிகளுக்கு இடையேயான போட்டி, செயற்பாடின்மை மற்றும் மக்களின் விரக்தி போன்ற பல என எம் சி எம் இக்பால் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது முஸ்லிம் தலைவர்கள் மௌனிகளாக இருந்தமை அவர்களை விரக்தி அடையச் செய்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்தமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாக்கு குறைந்தமை கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கடந்த பகைகளை மறந்து முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேரந்து செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதென அவர் கூறினார்.
எல்லா முஸ்லிம்களும் சகோதரர்கள் போல் இருக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்ற போதும் இவர்கள் எதிரிகளாக இருக்கின்றனர் என எம் சி எம் இக்பால் கவலை வெளியிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரு போனஸ் ஆசனங்கள் கிடைக்கவுள்ள நிலையில் அதில் ஒன்றை முஸ்லிம்களுக்கு வழங்கினால் அது சிறந்த விடயமாக அமைவதோடு முஸ்லிம்கள் சார்பில் குரல் எழுப்பவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்காக உழைக்கவில்லை எனவும் முஸ்லிம் மக்கள் குறித்து அவர்களிடம் நிகழ்ச்சி நிரல் ஒன்று இல்லை எனவும் கூறியுள்ள எம் சி எம் இக்பால், தமிழர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக