புதன், 30 மே, 2012

தஞ்சக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதை இடை நிறுத்தியது பிரித்தானியா!

பிரித்தானியாவில் இருந்து நாளை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழ் அகதிகளை, குடிவரவு அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மேலும் சிலர் கொல்லப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே அதிகாரிகள் திடீர் முடிவை எடுத்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. சமீபத்தில் பிரித்தானியப் பாராளுமன்றிலும் இதுதொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் நாளை சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படவிருந்தனர்.
மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் பிரித்தானியக் குடிவரவு அதிகாரிகளுக்கு சில தரவுகளை வழங்கியுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட ஆதாரங்களையும் அவர்கள் சமர்பித்துள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையில், கைச்சாத்திட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இந் நாட்டில் இருந்து ஒருவர் திருப்பி அனுப்பப்படும்போது, குறிப்பிட்ட நபர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றால், அதற்கான பொறுப்பை பிரித்தானியா ஏற்க்கவேண்டும்.
இவ்வாறனதொரு சூழ் நிலையிலேயே பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாளை நாடுகடத்தப்படவிருந்த தமிழர்களை, தற்போது திருப்பி அனுப்புவது இல்லை என முடிவெடுத்துள்ளனர் என மேலும் அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக