செவ்வாய், 5 ஜூன், 2012

மன்னார் ஆயரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மஹிந்தவிடம் பாப்பரசர் கோருவார்!

popமன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோப் ஆண்டகையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துப் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ற், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது அதிருப்தியை வெளியிடுவார் என்று வத்திக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன.பிரிட்டன் மகாராணியின் வைர விழா நிகழ்வுக்காகப் பிரிட்டனுக்குச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 7 ஆம் திகதியன்று வத்திக்கானுக்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் பாப்பரசரைச் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில், மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து, பாப்பரசர் தனிப்பட்ட ரீதியில் தன்து அதிருப்தியை வெளியிடுவார் என்று வத்திக்கான் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்றத்தில் வைத்து மன்னார் ஆயரை, பௌத்த பிக்குமாருக்கு ஒப்பிட்டமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் ஆயர் அளித்த காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றமை போன்ற விடயங்கள் வத்திக்கானுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தச் சம்பவத்தை அடுத்து மன்னார் ஆயருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்துக்குத் தடையுத்தரவு விதிக்கப்பட்டமை, கூட்டத்தில் பங்கேற்ற சிரேஸ்ட முஸ்லிம் செய்தியாளர் அமைச்சுர் ரிசாத் பதியுதீனின் ஆதரவாளர் ஒருவரால் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களும் வத்திக்கானுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வத்திக்கான் நியதியின்படி, முதலில் பாப்பரசர் மன்னார் ஆயரின் விடயம் குறித்து ஜனாதிபதியிடம் தன்து அதிருப்தியை நேரடியாக வெளியிடுவார்.
இதன்பின்னர், பாப்பரசரின் செயலாளரான காருதினால் டார்சிஸ்ஸியோ பேர்டோன், இந்த விடயம் குறித்து இலங்கையின் ஜனாதிபதியிடம் விளக்கம் கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை, 1940 ஆம் ஆண்டில் பிறந்தார். 1967ஆம் ஆண்டு குருத்துவம் பெற்றார். இதன்பின்னர் சுமார் 20 ஆம் ஆண்டுகள் அவர் மன்னார் ஆயராக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக