வெள்ளி, 8 ஜூன், 2012

நெஞ்சைத் துளைக்கும் ரவைகளால் போராட்டங்களைத் தடுக்க முடியாது!

newsஎமது போராட்டத்தை தடுத்து நிறுத்த நெஞ்சை துளைக்கும் ரவைகளால் முடியாது. இதனை நாம் வரலாற்றில் நிரூபித்துள்ளோம். எனவே அனைவரும் எங்களுடன் இணையுங்கள்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை தடை செய்வதன் மூலம் சுதந்திர கல்விக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை தடுக்க முடியாது என்று அதன் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொலிஸ் தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிரவைகள், நீதிமன்றம் மற்றும் சிறை என்பவற்றால் போராட்டத்தை தடை செய்ய முடியாது.தனியார் மயப்படுத்தல் இன்று நாட்டின் கொள்கையாக மாறிவிட்டது.2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நாட்டில் 355 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.இன்னும் பல பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
பாடசாலை அபிவிருத்திச்சங்கம் என ஒன்றை அமைத்து பணம் சேகரித்து பாடசாலையை நடத்திச் செல்லும் பொறுப்பை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவற்றினால் கல்வித்துறையில் இடம் பெறும் மோசடிகளுக்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.மோசடிகளுக்கு எதிராக போராடவும் தயார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைத் தடை செய்து எமது போராட்டத்தை முடக்க முடியாது.
வறுமையில் வாடும் பெற்றோர்களின் பிள்ளைகள் படிக்க பாடசாலை வேண்டும். பல்கலைக்கழகம் வேண்டும். அதனை யோசிக்காமல் வெறுமனே பட்டம் குறித்து மாத்திரம் எம்மால் சிந்திக்க முடியாது.என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக