இந்நிலையில் தனது மகனின் சடலத்தைப் பொருப்பேற்றுக் கொள்வதற்காக றாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிமலரூபனின் பெற்றோர் இதுவரையிலும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அறியக் கிடைத்துள்ளது.
றாகம பொலிஸார் நீதிமன்றில் பெற்ற உத்தரவிற்கு அமைய இன்று இரவு நிமலரூபனின் சடலம் றாகம பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்படலாம் எனவும், இதன் பின்னர் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலுள்ள நிமலரூபனின் பெற்றோர் நேரடியாக வவுனியாவிற்கு கொண்டுச் செல்லப்படலாம் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளரும், நாம் இலங்கையர் அமைப்பின் தலைவருமான உதுல் பிரேமரத்ன தெரிவிக்கின்றார்
தான் றாகம வைத்தியசாலைக்கு சென்ற போதும் நிமலரூபனின் சடலத்தையோ, அல்லது அவருடைய பெற்றோரையோ பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும், பொலிஸார் குவிக்கப்பட்டு றாகம வைத்தியசாலை பாதுகாப்பு வலயமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கொல்லப்பட்ட நிமலரூபனின் பெற்றோர் தனது பிள்ளையின் சடலத்தை தங்களிடம் தருமாறு கண்ணீர் மல்க கேட்ட போதும் பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய றாகம பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் உதுல் பிரேமரத்ன குறிப்பிடுகின்றார்.
வவுனியா சம்பவத்தில் உயிரிழந்த நிமல் ரூபனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தடை!
கடந்த மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினைத் தொடர்ந்து சிறை அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டு கடும் காயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உயிரிழந்த நிமல் ரூபனின் சடலத்தை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
குறித்த நபர் சிறைச்சாலைக்குள்ளேயே பிரிவினைவாதத்தை தூண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும், எனவே அவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுச் சென்றால் அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்ற காரணத்தை பிரதானமாகக் கொண்டு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த நிமல் ரூபனின் சடலத்தை மிகவிரைவில் ராகம பொதுமயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் ராகம பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இதனைத் தடுப்பதற்கு சட்டத்தரணிகள் ஊடாக தாம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளாரும் நாம் இலங்கையர் அமைப்பின் தலைவருமான உதுல் பிரேமரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இறந்த தனது மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராகம வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த கொல்லப்பட்ட நிமல் ரூபனின் பெற்றோர் நீதிமன்றத்தின் இந்த தடையுத்தரைக் கேட்டு அதிர்ச்சி கொண்டதுடன், அச்சம் கொண்டுள்ளதாகவும் உதுல் பிரேமரத்ன தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக