இனவாத அரசுக்கு மூக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அத்தாவுல்லா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் சில மதத் தலைவர்களும் இணைந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் மஹிந்த ராஜபக்ஷவிடம் அடகு வைத்து விட்டனர். இவர்களைத் தரகர்கள் என்றே கூறவேண்டும்.இரண்டு வாரங்களின் முன் ஜனாதிபதியைச் சந்தித்த இவர்கள் கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்து விட்டனர். முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே கூரையின் கீழ் போட்டியிடுவோம் எனக் கூறித்திரிகிறது வெறும் பம்மாத்து எனக் கூறினார். கேகாலை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் ஹாசீம்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அம்பலப்படுத்தினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
இந்த அமைச்சர்களிடமும், சில முஸ்லிம் மதத் தலைவர்களிடமும், மக்களைப் பற்றி கவலை இல்லை. தமது அமைச்சுப் பதவிகளையும் சுகபோக வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களின் ஒரே நோக்கம்.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவோம். முஸ்லிம் மக்களைப் பாதுகாப்போம். என்று வெளியில் கூறிக்கொள்ளும் இவர்கள் ஏற்கனவே அரசுடன் இணைந்து போட்டியிடுவோம் என ஜனாதிபதியிடம் வாக்குறுதி அளித்துவிட்டனர். இது முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் ஒரு மாபெரும் துரோகமாகும். இவர்களின் பசப்பு வார்த்தைகளை முஸ்லிம் மக்கள் நம்பி ஏமாறக்கூடாது.
மஹிந்த அரசு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றது முஸ்லிம் பள்ளிவாசல்களை இடிக்கின்றது. தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டபோது இந்த அமைச்சர்கள் என்ன செய்தனர். மாறாக முஸ்லிம் பள்ளிவாசல்களைப் பதிவு செய்ய வழி சமைத்தனர்.
இந்த அமைச்சர்கள் இனவாத அரசிடம் முஸ்லிம் மக்களை அடைவு வைக்க நாம் இடம் கொடுக்கமாட்டோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக