ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

2000 முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று இராணுவத்துடன் இணைக்கப்படுகின்றனர்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வைபவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறும்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் (Civil Security Department) இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டமாகவே 2000 பேர் இன்று இணைக்கப்படுவதாக சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5000 பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து அவர்களை வடபகுதியின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு அமைய 2000ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினருக்கே இன்றையதினம் நேர்முகப்பரீட்சை நடத்தி நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் மேஜர் மென்டிஸ் குறிப்பிட்டார். “இன்று முதல் சிவில் பாதுகாப்புப் படையில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு மாதாந்தம் 18,000ற்கும் குறையாத சம்பளம் வழங்கப்பட விருப்பதுடன், ஏனைய வசதிகளும் இவர்களுக்குச் செய்துகொடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளார். சிவில் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்படும் இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, வடபகுதியில் அவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக