சனி, 1 செப்டம்பர், 2012

தமிழ் மக்கள் 80 சதவீதத்துக்கு மேல் வாக்களித்தால் தமிழர் ஒருவர் முதலமைச்சராகலாம்




கிழக்கு தமிழ் மக்கள் 80சதவீதத்துக்கு மேல் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர் ஒருவர் முதலமைச்சராகலாம். இதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வேறுபாடின்றி ஒரே தாய் பிள்ளைகளாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கும் அரசுக்கும் வெளிப்படுத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிழக்கில் நாம் ஆட்சியமைத்தால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான மக்கள் அங்கீகாரமாகவும் இது அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
நாம் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சின்னம் ஒழுங்குபடுத்தப்பட்ட மத்திய குழு, செயற்குழு, மாவட்டக் குழு, கிராமியக் குழு என்பன அமைக்கப்பட்டு செயற்பட வேண்டிய நிலை உள்ளது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஒரே கட்சியாக இருக்கும். அதுவே மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கும்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களுடைய குறைந்த பட்ச அரசியல் அபிலாஷைகளை வெல்லக் கூடிய அமைப்பாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் கோத்தபாய, மஹிந்த, பஷில், சம்பிக்க ரணவக்க, விமல்வீரவன்ச ஆகியோர் எமது பிரச்சனை பற்றி தனித்தனியாக அறிக்கை விடுகின்றபோதும் அவை ஒட்டு மொத்தமாக ஒரு குடும்ப அறிக்கை போலவே இருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

இன்று எங்களுடைய பிரச்சினை சர்வமயப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா காலத்தில் கூட இப்படியான ஒரு நிலை காணப்படவில்லை. அப்போது அயல் நாட்டுக்குக் கூட எமது பிரச்சினை பற்றி தெரியாத நிலையே காணப்பட்டது.

இன்று ஐ.நா சபையிலிருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினை தெரியவந்துள்ளது. அவர்கள் ரி.என்.ஏ. யுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்கு திட்டவட்டமான தீர்வு காணப்பட வேண்டுமென அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது எமக்கு சாதகமான சூழ்நிலையாகும்.

இந்த சூழலை நாம் நன்கு பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழரின் ஒரே அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் என்று உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக