புதன், 5 செப்டம்பர், 2012

திருச்சியில் தாக்குதலுக்குள்ளான யாத்திரிகர்கள் இலங்கை வருகை

‘இலங்கையர் வெளியேற வேண்டும்’ என கோசம் எழுப்பியவாறு தாக்குதல் நடத்தப்பட்டது: நாடு திரும்பிய யாத்திரிகர்கள்திருச்சியில் தாக்குதலுக்குள்ளான யாத்திரிகர்கள் இலங்கை வருகை
விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்
தமிழகத்தின் திருச்சியில் தாக்குத லுக்குள்ளாக்கப்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் நேற்று இரவு 11.40க்கு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
திருச்சியிலிருந்து புறப்பட்ட எம்.ஜே. 302 ரக மிஹின் லங்கா விமானம் நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்திலேயே இலங்கையர் 187 பேரும் அழைத்து வரப்பட்டனர்.
இலங்கையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற இலங்கையர்கள் பூண்டியிலுள்ள மாதா கோயிலுக்கு சென்றனர். தஞ்சை மாதா ஆலயத்துக்கு வந்த இலங்கையரை வெளியேற்றக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி னார்கள். தஞ்சை அருகே உள்ள பூண்டியில் புகழ்பெற்ற மாதா ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்திற்கு 187 பேர் திங்கட்கிழமை வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க சென்றிருந்தனர். இந்த தகவல்கள் தமிழ் அமைப்புகளுக்கு கிடைத்ததை அடுத்து இலங்கையர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையென் றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் இலங்கையர் வெளியேறி விடுவதாக கூறப்பட்டதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பூண்டி மாதா ஆலயத்தில் பரபரப்பு உருவானது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பூண்டி மாதா ஆலயத்தில் தங்கி இருந்து 187 இலங்கையரும் வான்களில் வெளியே புறப்பட்டு சென்றனர்.
அவர்களை பத்திரமாக திருச்சி அழைத்துச் சென்று அங்கிருந்து விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேவேளை வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்களுக்கு பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் சுமார் 10 பேருந்துகளில் பொலிஸ் பாதுகாப்போடு திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை, திருவாரூரில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, பேருந்து மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக