சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசாங்கத்துக்கே ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் கட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால், வெற்றி பெற முடியாது என்ற நிலையிலேயே தனித்து போட்டியிட்டது.
இந்த நிலையில் அரசாங்கத்தை விரும்பாத கிழக்கு மாகாண முஸ்லிம்களே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்திருந்தனர்.
முஸ்லிம் காங்கிரஸில் இடம்பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களும், இந்த கருத்தை முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.
எனினும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதில் விடாபிடியாக இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் மேலும் ஒரு அமைச்சரவை அமைச்சுப் பதவியும், இரண்டு பிரதி அமைச்சுப் பதவியும் வழங்குவதாக ஒப்பு கொண்டுள்ளதுடன்,கிழக்கில் முதலமைச்சர் பதவியும் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸின் அதீத இழுப்பறியினால், அரசாங்கம் மாற்று முயற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரையும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருவரையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இருவரையும் தமது கட்சியுடன் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதில் ஓரளவு வெற்றி காணப்பட்டிருப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சாத்தியப்படுமாக இருந்தால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் தன்மை நலிவடைந்துவிடுவதுடன், மிகப்பெரிய வாய்ப்பினையும் முஸ்லிம் காங்கிரஸ இழந்துவிடும் என்ற அச்சம் காங்கிரஸ் உறுப்பினர்களிடேயே ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் இந்த முறை தமது உறுப்பினர் ஒருவருக்கே கிழக்கில் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரி இருப்பதுடன், இதற்காக அமீர் அலியின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
இது மேலும் அரசாங்கத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கே ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதனை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும், ஏற்கனவே மக்களிடம் மேற்கொண்ட பிரசாரத்துக்கு முரணாக அமைந்துவிடும் என்ற அச்சத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தமது தீர்மானத்தை இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக