கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானே மீண்டும் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை கொண்டுள்ளது.
11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை கொண்டுள்ளன.
இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்து தொடர்பில் எவ்வித பதில்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
எவ்வாறாயினும், கிழக்கில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இல்லை என்றும், விரைவில் மூன்று மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் குறித்து அறிவிக்கப்படுவர் என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் சிவநேசத்துரை சந்திரகாந்தனே நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற மேலதிக ஆசனங்கள் இரண்டுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரைக்கின்ற இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைர் ஹபீஸ் அஹமட் நசீர் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு முதலமைச்சர் பதவி தேவை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும், அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக