வியாழன், 6 செப்டம்பர், 2012

எம் மக்களின் பற்றுறுதி தேர்தலில் வெளிப்படும்; மாவை.எம்.பி. நம்பிக்கை

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றிலில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டாலும் கூட ஒன்றாகவே வாழ்வோம், ஒன்றாகவே ஆள்வோம் என்ற திடமான உறுதியைக் கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தம் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதுபோல் இம்முறை நடைபெறும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டு வருவது மகிழ்வைத் தருகின்றது.
மௌனப் புரட்சி
உலகை ஏமாற்றும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முன்வந்ததும், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து அந்தத் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தது.
அரசின் அமைச்சுப் பதவியைப் பெற்றிருந்த நிலையிலும் கூட அரசுடன் சேர்ந்து போட்டியிடக்கூடாது என்ற மௌனப் புரட்சி முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும், அதே எழுச்சி உணர்வுபூர்வமாக முஸ்லிம் மக்களிடையேயும் ஏற்பட்டன. இதனால் ஜனாதிபதியின் கனவு தகர்க்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையேற்பட்டது.
ஆனால் முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்ட இந்த உணர்வுகூட முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் போன்றவர்களுக்கு இல்லையே என நம் மக்கள் கிளர்ந்தெழாதது தான் நாம் விட்டதவறாகும். எனினும் இத்தகையவர்களுக்கு மக்கள் நாளைமறுதினம் தக்க பாடத்தைப் புகட்டத்தான் போகின்றனர்.
சர்வதேசம்
இன்று ராஜபக்ஷ அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் அதே அநீதிகளைத் தான் முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வருகின்றது. முஸ்லிம்களின் இன்றைய ராஜபக்ஷ அரசுக்கு எதிரான எழுச்சியும், தொடர்ச்சியான தமிழ் மக்களின் திடசங்கற்பம், ஜனநாயகத் தீர்ப்புகள் உலகத்தைக் கண்விழிக்கச் செய்திருக்கின்றது. முஸ்லிம் மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் சர்வதேசம் மதிப்பிட்டு வருகின்றது.
இந்த நிலையில் எம் உரிமைகளுக்காக முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டிருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத பேரினவாதசக்திகள், பேரினவாத பௌத்த சக்திகள் துவேச அடிப்படையில் பிதற்றத் தொடங்கியுள்ளன.
இது இனவாதமா?
எம் நிலத்தை அபகரிக்காதே, எம்மத சுதந்திரங்களில் கைவைக்காதே, அநீதி செய்யாதே, எம்மை மீள்குடியேற்ற அனுமதி, வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கி பௌத்த குடியேற்றங்களைச் செய்யாதே, பள்ளிவாசல்களை, இந்துக் கோயில்களை இடிக்காதே என நாம் குரலெழுப்பினால் அது இனவாதமாகுமா?
பொறுப்பு வாய்ந்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் இனவாதத்தை விதைக்கும் வகையில் பிரசாரம் செய்வதாகக் கூறுவது அறியாமை, பித்தலாட்டமாகும்.
இன்று பரவலாக அரசும் அதன் அடிவருடிகளும் அபிவிருத்தி பற்றி தம்பட்டமடிக் கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் என்ன அபிவிருத்தியை இவர்கள் செய்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடையும் வெளிநாட்டு கடனும் தான் இவர்களது அபிவிருத்திச் சாதனை. இந்த அரசு இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்ற நிலைமையேயுள்ளது.
தமிழர் நிர்வாகம்
தமிழர் நிர்வாகம் இந்த மண்ணில் ஏற்படுமானால், தமிழர் தம் நிலத்தில் ஆள்பவர்களாகவிருந்தால் மிகக் குறுகிய காலத்தில் அபிவிருத்திகளை ஏற்படுத்தலாம். எனவே இதற்கான வாய்ப்பை நம்மக்கள் கிழக்கில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக