வியாழன், 6 செப்டம்பர், 2012

சரவணபவன் எம்.பி. உறுதி


 சரவணபவன் எம்.பி. உறுதி
news
 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடும் ஒரு தமிழரைக்கூட கிழக்கு மக்கள் ஆதரிக்கக்கூடாது. அவர்களை முற்றாகத் தோற்கடிக்க வேண்டும். 
 
முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் தங்கள் உயிரை ஈகம் செய்தனர். அதன் மூலம் போர்க் குற்ற அறிக்கை என்ற ஆயுதத்தை அவர்கள் எம்மிடம் விட்டுச் சென்றுள்ளார்கள். எனவே, நாம் அனைவரும் 
ஒன்றுபட்டு இத் தேர்தலில் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பதே எமது உறவுகளுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
 
 இவ்வாறு அழைப்பு விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சரவணபவன். அம்பாறையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியவை வருமாறு நாம் தொடங்கிய அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்தது. மாற்றமடைய வைத்தது இந்த அரசுதான்.
 
நாம் இப்போது ஆயுதவழியை விட்டு விலகி இராஜதந்திர வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். இந்த வழியில் வெற்றி நிச்சயம்.
 
இந்த இராஜதந்திர வழியில் நாம் எப்படி வந்தோம் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். கடைசியாக முள்ளிவாய்க்காலில் போராளிகளும் மக்களுமாக பல பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர். எமக்காக அவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டனர். 
அநியாயமாக இந்த அரசு அவர்களைக் கொலை செய்தது. இது தொடர்பாக சர்வதேசம் போர்க்குற்ற அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. இந்த அறிக்கையை இல்லாமல் செய்வதற்காக அரசும் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் முயன்றனர். சர்வதேசம் அதற்கு இடங்கொடுக்கவில்லை.
 
எமது இனம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளது. அது எமக்காக எடுக்கவேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் சர்வதேச சட்டப்படி எடுத்துக்கொண்டிருக்கிறது.
 
இன்று சர்வதேசம் எமது நிலைப்பாட்டைப் பார்த்து எமக்குச் செய்யவேண்டியதைச் செய்யும். சர்வதேசத்திற்குத் தமது நிலைப்பாட்டைக் காட்டுவதற்காக அரசு கிழக்கு மாகாணசபைத் தேர்தலைக் கொண்டு வந்திருக்கிறது. இத் தேர்தலில் அரசு நிச்சயம் மண் கவ்வும்.
 
அரசால் எதையும் சாதிக்க முடியாது. அறவழியில் முன்னெடுக்கப்படும் எமது போராட்டத்தைக்கூட அரசு நசுக்கப்பார்க்கிறது. இந்த மாகாணசபை என்பது எமக்குக் கிடைத்த பூமாலை போன்றது. இந்த மாகாணத்திற்குத் தேர்தலை வைத்தார்கள். 
 
போகக்கூடாதவர்களின் கைகளுக்கு இந்தப் பூமாலை சென்றது. அது குரங்கின் கையில் கிடைத்த  பூமாலை போன்று ஆனது.
 
மீண்டும் அவர்களிடம் இந்த சபையைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் நடந்தவையும் உங்களுக்குத் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவார்கள். அவர்கள் பதவிக்காக சலுகைக்காக அடிபணியமாட்டார்கள்.
 
அம்பாறையில் மூன்று ஆசனங்களும், மட்டக்களப்பில் எட்டு ஆசனங்களும், திருகோணமலையில் ஐந்து ஆசனங்களும் எமக்குக் கிடைக்கும்.
 
அந்த 16 ஆசனங்களுடன் இரண்டு போனஸ் ஆசனங்களைச் சேர்த்தால் 18 ஆசனங்களாகும். நாம் விரும்பினால் சுயேச்சைக்குழுவை அல்லது வேறு கட்சியை இணைத்துக் கொண்டு ஆட்சியை அமைக்கலாம். இந்த நிலைமையை மக்கள் உருவாக்கவேண்டும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேடியே ஏனைய கட்சிகள் வரவேண்டும். கூட்டமைப்பு எந்தக் கட்சியையும் தேடிப்போகக் கூடாது. அந்த நிலைமையை மக்களாகிய நீங்கள் உருவாக்கவேண்டும்.
 
இந்தத் தடவை எமக்குள்ள சந்தர்ப்பம் அடுத்த தடவை மாற்றப்படலாம். ஆகவே, இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
 
ஆயுதப் போராட்டம் முடிந்ததன் பின்னர் சர்வதேச சமூகம் எமக்காகப் போராடுகிறது. அதனிடம் சென்று ஜனநாயக வழியில் எமக்கு வேண்டிய அனைத்தையும் நாம் பெறவேண்டும். அதற்காக நாம் இத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
 
வடக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசு பணத்தை வாரி இறைத்தது. வன்னி மக்கள் அதைப் பெற்றனர். 65 சதவீதமான மக்கள் எமக்கே வாக்களித்து சபைகளை எம்மிடம் ஒப்படைத்தனர். 
 
உரிமைக்காகப் போராடும் தமிழர்கள் எதற்கும் விலைபோகமாட்டார்கள் என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். அதனைவிடவும் அதிகமாக கிழக்கு மக்கள் அரசுக்குப் புரியவைக்க வேண்டும்.
 
எமக்காக உயிர்நீத்த போராளிகள், மக்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக