புதன், 24 அக்டோபர், 2012

பசில் ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை! ஆதாரமற்றவை! நிராகரிக்கிறார் இரா. சம்பந்தன்

பசில் ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை! ஆதாரமற்றவை! நிராகரிக்கிறார் இரா. சம்பந்தன்
இலங்கை பொருளாதார அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்திய குற்றச்சாட்டு தவறானது, பொறுப்பற்றது என்று ஆக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு கொழும்பில் சில தமிழ் ஊடகவியலாளர்களிடையே பேசிய பசில் ராஜபக்ச, இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் சீனாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதாக குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், மேற்கண்டவாறு அவரது குற்றச்சாட்டை நிராகரித்தார்.
அத்துடன், தாங்கள் இந்திய மற்றும் சீன ராஜிய அலுவலர்களை சந்தித்தபோது, இலங்கைக்குப் பொருளாதர உதவிகள் வழங்க வேண்டாம் என்று கோரவில்லை என்றும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்தே பேசினோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்ச தனித்து வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது! அவ்வாறு அவர் தான் மட்டும் வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுவது அகங்காரமானது.

13வது திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்ச கூறியதன் பிரகாரம் முழுமையாக அமுல்படுத்தி அதாவது அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்ட பின்னர், வடமாகாண தேர்தல் முடிந்த பின் அச்சபையின் பிரதிநிதிகள் ஊடாக அபிவிருத்தி செய்யப்படலாம்.
பசிலின் அண்ணனான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பல தடவைகளில் கூறியிருக்கிறார். எங்களிடம் மாத்திரமல்ல பல நாட்டுத் தலைவர்களிடமும், பல நாடுகளின் தூதுவர்களிடமும் கூறியிருக்கின்றார். அந்த நிலையில் பசில் ராஜபக்ச 13 வது திருத்தச்சட்டம் பற்றி கூறுவது அவரது தனிப்பட்ட கருத்தாகவே கொள்ள முடியும்.
13வது அரசியல் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கூறப்படுவது பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், இது குறித்து அரசு உறுதியான முடிவெடுக்கும் நிலையில் தனது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இலங்கையின் வட மாகாணத்தில் சமுர்த்தி திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கும், திவிநெகும சட்டத்துக்கும் என்பனவற்றுக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தடையாக இருக்கும் என்று கருதப்பட்டால், அதை ரத்து செய்ய இலங்கை அரசு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆராயும் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக