தேசியக் கூட்டமைப்புபாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் தொடர்ந்து இழுத்தடித்தால் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் நோக்கில் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்படும். கூட்டமைப்பினருடன் மட்டும் அரசு பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கும் அப்பால் செல்லும் அதிகார பரவலாக்கல் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதானே அரசின் நிலைப்பாடு என்று ஊடகவியலாளர்கள் நேற்று ஊடக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், '13 பிளஸ் என்பதன் மூலம் செனட் சபை ஒன்றை, அதாவது நாடாளுமன்றத்தில் மேலவை ஒன்றை ஏற்படுத்தி, சிதறிக் கிடக்கும் பிராந்தியங்களின் தலைவர்களை மத்திய அதிகார மையத்துடன் ஒன்றிணைக்கும் திட்டத்தைத் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் டில்லியில் நடந்த கூட்டமொன்றில் தெளிவாக விளக்கியிருந்தார் என்று கூறினார்.
எனினும் நாட்டில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பது அவசியம் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் கிடைத்து விட்டதா என்று பிபிசி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கடந்த 6 மாதங்களாக இதுபற்றி பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு போகிறார்கள்,. வருகிறார்கள் அங்கு ஆலோசனை பெறுகிறார்கள். சில நேரங்களில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுடன் பேசி வேலை இல்லை என்றும் கூறுகிறார்கள்.
எல்லாக் கட்சிகளும் அங்களும் வகிக்கும் நாடாளுமன்றத்தில் பேசாவிட்டால் எங்கு பேசுவது, யாருடன் பேசினாலும் இறுதியில் நாடாளுமன்றத்துக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று கூறினார்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துகின்ற அரசாங்கம், இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று பிபிசி மீண்டும் கேள்வி எழுப்பியது.
எதிரில் இருக்கின்ற பிரதானமான அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முடியுமான வாய்ப்புகளை வழங்கும்.
அப்படி இல்லாவிட்டால், இருக்கின்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு, நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று ஆராய்வதற்காக. பொருத்தமானவர்கள் என்று அரசாங்கம் கருதுகின்ற தரப்பினருடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும்.
என்று இலங்கை அரசின் அமைச்சரவை நிலைப்பாடுகளை அறிவிக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதற்குப் பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக