செவ்வாய், 30 அக்டோபர், 2012

கோத்தவின் நடவடிக்கைகள் தமிழ் சிங்கள உறவைப் பாதிக்கும்; எச்சரிக்கின்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

news

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கைகளினால் தமிழ், சிங்கள மக்களின் உறவுகள் மேலும் பாதிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அண்மையில் கோத்தபாயா ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை,இலங்கையில் இன நெருக்கடி இல்லை அவர்கள் சம உரிமை பெற்றுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இவருக்கு இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பது தொரியாதது போன்ற ஒரு நாடகத்தினை நடத்துகின்றார்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு பட்ட விடயங்கள் நடைபெற தொடங்கி விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினை இருக்கின்றது என்பது அனைத்துத் தரப்பினர்களாலும், ஆரம்ப காலத்தில் இருந்த ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.
இவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது, அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அவர்களுடன் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் என்பது ஒரு தேசிய இனம், அவர்கள் வடக்கு, கிழக்கில் பெரும்பாண்மையாக வாழ்கின்றார்கள் என்ற ரீதியிலேயே தந்தை செல்வா காலத்தில் இருந்த இந்த பிரச்சினை கையாளப்பட்டது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கோத்தபாயவின் நடவடிக்கைகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் மேலும் மேலும் எதிரிகளாக்கும் விடயமாகவே இருக்கின்றது.தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழ முடியாத சூழலைத்தான் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ச முதலில் தான் என்ன விடயத்தை செய்கின்றார் என்பதை யோசிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடைய நடவடிக்கை முழுவதும் தமிழ் மக்களை முழுமையாகஅழித்தொழிக்கும் நடவடிக்கையே.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவர் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் சமத்துவம், ஒற்றுமை உள்ளது என்பது அவருடைய சிந்தனையில் ஏற்பட்டுள்ள குழறுபடியா அல்லது அவர் ஒன்றும் தெரியாத பாவியாக இருக்கின்றாரா என்பது தெரியவில்லை.
ஆகவே அவர் சொல்கின்ற விடயம் எல்லாம் எந்தவிதத்திலும் உப்புச்சப்பில்லாத விடயம். இவ்வாறு சொல்லிக் கொண்டு இருப்பதால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக