வெள்ளி, 26 அக்டோபர், 2012

கே.பியுடன் நரேன் எனும் மற்றுமொரு விடுதலைப்புலிகளின் தலைவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது - சுனில்

கே.பி என்ற குமரன் பத்மநாதனுடன் மற்றுமொரு விடுதலைப்புலிகளின் தலைவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இரத்தினசபாபதி என்ற புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முன்னாள் தலைவரை அரசாங்கம் இவ்வாறு விடுதலை செய்துள்ளது.

நரேன் என்று அழைக்கப்படும் நரேந்திரன் இரத்தினசபாபதி என்பவரே இவ்வாறு கே.பியுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியில் வரவில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் அதனை மூடி மறைத்து வந்துள்ளது. ஒரு புறம் கே.பிக்கு அரசசார்பற்ற நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுத்து சுகபோகங்களை வழங்கி வருவதுடன் மற்றுமொரு புலித் தலைவரை விடுதலை செய்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை காட்டில் கொண்டு சென்று விடுகிறது. இந்த அரசாங்கம் உண்மையில் பிரிவினைவாத்திற்கு துணைபுரிந்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு சுகபோகங்களை வழங்கிறது. தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவோ, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவோ இந்த அரசாங்கத்திற்கு தேவையில்லை. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திற்கும் இடையில் விரசமே ஏற்படும்.

ஒரு புறம் அரசாங்கம் தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்குகள் இல்லை. குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. மறுபுறம் கே.பி போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களை நடத்த முடியும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே கூறுகிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற விடயத்தை மேழெலச் செய்ய வேண்டும். அது குறித்து கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக