மாவீரர் நாளான நேற்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி நுழைந்தமையினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். பல்கலை மாணவர்கள் மீது படையினரும், பொலிஸாரும் இணைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று காலை 11மணியளவில் மேற்குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாய்களை கறுப்பு பட்டியால் கட்டிக்கொண்டு, இராணுவத்தின் அராஜகப் போக்கினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த போராட்டத்தை வீதிக்கு கொண்டுவந்து நடத்த முற்பட்டபோது அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த பெருமளவு படையினரும், பொலிஸாரும் திடீரென மாணவர்கள் மீது தடி, இறப்பர் வயர், கம்பிகள் போன்றவற்றால் சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தினர்.
இதில் நிலைகுலைந்த மாணவர்கள் பெருமளவானோர் வளாகத்திற்குள் ஓடி விட, சிலரை வீதியில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இதன் பின்னர் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்தின் பின்னர் அங்குவந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் படையினருடனும், பொலிஸாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து பொலிஸார் மீது மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பொலிஸ் புலனாய்வாளர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக சூழல் மித மிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தால், போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.
இதேவேளை சம்பவத்தின்போது குறித்த பகுதிக்கு வந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் தற்போது பல்கலைக்கழக சூழலில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் வளாகச்சூழில் இராணுவம் குவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் வளாகத்திற்குள் முடக்கப்பட்டிருக்கின்றனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.
இந்நாட்டில் சட்டம் என்பது ஒரு பாரதூரமான நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித் துறையின் சுயாதீனத் தன்மையானது பாதாளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக