யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களை சிக்க வைக்கும் நாடகமொன்றை இன்று இலங்கை இராணுவ புலனாய்வுப்பிரிவும் பொலிஸ் தரப்பும் இணைந்து அரங்கேற்ற தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிக அண்மையில் அவசர அவசரமாக பல்கலைக்கழக பின் வீதியில் துணை ஆயுதக்குழுவான சிறீடொலோ அமைப்பின் அலுவலகமொன்று திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை தமது அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக அக்கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.
செய்தியின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகத்தில் கணிசமான பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறுத்துவிட்டன. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலில் குறித்த துணை ஆயுதக்குழுவினது அங்கத்தவர்கள் நேரடியாக பங்கெடுத்தமை அம்பலமாகியும் இருந்தது.இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டது போன்று தமது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களில் ஏழு பேரது பெயர்கள் குறிப்பிட்டு புகாரொன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்களுள் முன்னாள் மாணவ தலைவர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.எனினும் அவ்வாறு பெயர் குறி;ப்பிடப்பட்ட பலர் ஏற்கனவே தமது சொந்த இடங்களான வெளிமாவட்டங்களுக்கு தற்போதைய பகிஸ்கரிப்பு காரணமாக சென்றுவிட்டதாகவும் மாணவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த ஏழு மாணவர்களில் இருவர் மட்டுமே சட்டத்தரணிகள் மற்றும் பீடாதிபதிகள் சகிதம் இன்று பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளனர். எனினும் அவர்களை தாம் கைது செய்திருப்பதாக கூறும் பொலிஸ் நீதிமன்றில் ஆஜராகியே தீருவதென அடாவடியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் சக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகள் அதற்கு மறுதலித்து தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தினிலேயே தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இன்றும் பல்கலைக்கழக சூழல் படைத்தரப்பின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள நிலையில் அதையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக ஆசிரிய சங்கப்பிரதிநிகள் அரை நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக