
சிறப்பாக நடைபெற்று வரும் லண்டன் உலக தமிழர் மகாநாட்டு ஏற்பாடுகள்: தமிழக தலைவர்கள் பாரட்டு
சிறப்பாக நடைபெற்று வரும் லண்டன் உலக தமிழர் மகாநாட்டு ஏற்பாடுகள் பேராதரவு வழங்க தமிழக தலைவர்கள் வலியுறுத்தி, பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கூட்டாக இணைந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உலக தமிழர் மகாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் இந்த மகா நாட்டில் தாம் கலந்து கொள்ள இருப்பதை ஏராளமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேவளை தமிழ்நாட்டில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என்று பெரும் எண்ணிக்கையானோர் இந்த மகா நாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த மகா நாட்டிற்கு வருகைதர உள்ளனர்.
யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டத்தின் முக்கியமானதொரு நிகழ்வாக அமையவிருக்கும் இந்த மகாநாடு முழுமையான வெற்றி பெற்று, எதிர்வரும் மார்ச் 2013 இல் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சிறி லங்காவுக்கெதிராக உறுப்பு நாடுகள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான சர்வதேச அரசியல் ஏது நிலைகளை உருவாக்குவதற்கு உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிச கட்சி தலைவர் டி. ராஜா, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இந்திய கம்யூனிச கட்சி (தமிழ் நாடு) துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு தலைவர்கள் தற்போதைய தருணத்தில் இந்த மகாநாட்டின் அவசியத்தையும் முக்கியத்தையும் வலியுறுத்திஇ சகல தமிழர் தரப்பும் தோளோடு தோள் நின்று இந்த மகா நாட்டுக்கு ஆதரவு நல்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைத்து சிறி லங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட இனஅழிப்பு யுத்தம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை இந்த மகாநாடு வலியுறுத்தும் அதேசமயம் அதனை சாத்தியமாகும் வழிவகைகள் குறித்தும் எவ்வாறு எதிர் காலத்தில் ஒன்றிணைந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பது என்பது குறித்துமான மூலோபாய திட்டங்கள் பற்றியும் ஆராய்கிறது.
சுயாதிபத்தியம் மற்றும் இறைமை ஆகிய கோட்பாடுகளின் போர்வையில் பாரிய மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகளில் இருந்து சிறி லங்கா அரசாங்கம் தப்பிக்க முயற்சித்து வரும் நிலையில், சர்வதேச சுயாதீன விசாரணையை ஒன்றை ஐ. நா வினூடாக கொண்டுவருவதில் வெற்றி பெறுவதானது எதிர் காலத்தில் சிறி லங்காவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன் பெரும் பின்னடைவையும் கொடுக்கும் என்பதுடன் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வானது தவிர்க்க முடியாதவகையில் சிறி லங்காவின் கைகளுக்கு அப்பாற்ப்பட்ட அதன் சுயாதிபத்தியம் மற்றும் இறைமை ஆகியவற்றால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சர்வதேச விவகாரமாக பரிணாமம் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக