வெள்ளி, 2 நவம்பர், 2012

வடக்கில் இராணுவத்தை குறைத்து தேர்தலை உடன் நடத்துங்கள்: ஜெனீவாவில் கனடா


"வடக்கில் இராணுவப் பிரசன்னைத்தை குறைக்க வேண்டும். உடனே தேர்தல்களை அங்கு நடத்த வேண்டும்" என ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கனடா வலியுறுத்தியது. இலங்கை 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. கடந்த முறை மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த முக்கிய சூத்திரதாரியான அமெரிக்காவோ இலங்கை செய்ய வேண்டியதை மீண்டும் பட்டியலிட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமையன்று ஆரம்பித்த சர்வதேச காலக்கிரம ஆய்வு என்ற பொறிமுறையின் கீழான இலங்கை குறித்த விவாதத்தின் போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும் பல மேற்கத்திய நாடுகள் இலங்கை அரிசின் நிலைப்பாட்டை விமர்சித்தன.

நேற்றைய விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோர்களை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, உள்நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

இலங்கைக்கு உள்ளேயும் வெளேயேயும் சில சக்திகள் நாட்டை சீர் குலைக்க முனைவதாக அவர் குற்றம்சாட்டினார். கடத்தப்பட்டு காணமல் போவோரின் எண்ணிக்கை உயர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

வட மாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் பற்றிப் பேசிய அவர், "போரின் முடிவுக்கு பிறகு இராணுவத்தின் எண்ணிக்கை வட மாகாணத்தில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்திலோ, வன்னியிலோ இராணுவத்தின் பிரசன்னம் மக்களின் வாழ்க்கையில் குறுக்கிடுவதாக இல்லை. இராணுவம் மக்களுக்கு பல விதத்தில் உதவியுள்ளது. சுகாதார வசதிகளை வழங்கியது மட்டுமல்லாது இராணுவம் தனது சொந்த செலவில் 4652 நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது". என்றார்.

போரின் இறுதி கட்டத்தில் இராணுவம் பல மனித உரிமை மீறல்களை செய்தது – நிராயுத பாணிகளைக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் நிலையில் – இது குறித்து இராணுவமே விசாரித்து வருகிறது என்றார் சமரசிங்க. "பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள், சேனல் 4 வீடியோ குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் குறித்து படிப்பினைகள் ஆணைக்குழு அளித்த பரிந்துறைகளை இராணுவம் விசாரித்து வருகிறது. இதுவரை இந்த ஆணைக் குழு 30 முறைக்கு மேல் கூடியுள்ளது பலரை விசாரித்துள்ளது. சுமார் 50 சம்பவங்களை இந்த இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது.

இராணுவம் சிவிலியன்களுக்க இழப்பை ஏற்படுத்தியதா, மருத்துவமனைகள் மீது தாக்கியதா, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா போன்ற விடயங்கள் குறித்தும் சேனல் 4 வீடியோ உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க அதில் காணப்படுவோரை அடையாளம் காண முடியுமா போன்றவை குறித்தும் அது விசாரிக்கும். படிப்பினை ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இராணுவத்துக்கு பொருந்தக் கூடிய விடயங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அதை அமல்படுத்தும் திட்டத்தை உருவாக்கவும் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையும் இதே போன்று செய்துள்ளது. நான் கேட்கிறேன் இது முன்னேற்றமில்லை என்றால் எது முன்னேற்றம்". என்றார் சமரசிங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக