
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நோக்கி ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தண்ணிர் போத்தலால் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து இருதரப்பினர்களுக்குமிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றதையடுத்து கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை போர்க்களமாகக் காட்சியளித்தது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் ஆளுநர் ஆகியோரது இணைத்தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது ‘திவிநெகும’வை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அதன் நன்மைகள் தொடர்பிலும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கு எதிராக கூட்டமைப்பினரே வழக்குத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.
கூட்டமைப்பினரின் இத்தகைய செயற்பாடுகளால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவாக அமைச்சர் குறிப்பிட்டதனையடுத்து இருதரப்பினருக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதன்போது சபையில் அமர்ந்து கொண்டிருந்த சந்திரகுமார் கூட்டமைப்பினரை நோக்கி அநாகரியமான வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் காட்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து அழித்த ஈபிடிபியினர் தமிழ்மக்களது நன்மைகள் தொடர்பாக பேசுவது வேடிக்கையானது.கடத்தல், கொலை, கொள்ளை ,என்பவற்றில் ஈடுபட்டு தமிழ்மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கினீர்கள்.
இந் நிலையில் தமிழ் மக்கள் மீது தற்போது கொண்டுள்ள அக்கறை என்னவென்று எமக்குப் புரியவில்லை என்று இன்னும் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
இதன்போது ஆத்திரமுற்ற சந்திரகுமார் சிறிதரனை நோக்கி அருகிலிருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து வீச முற்பட்டார்.
இதன்போது முடிந்தால் வீசட்டும் எனக்கும் வீசத்தெரியும் . மக்களை வெருட்டுவது போன்று என்னை மிரட்ட முடியாது என சிறிதரன் ஆவேசமாகத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக