வெள்ளி, 9 நவம்பர், 2012

அரசுக்கு எதிராக ஜெனீவாவில் மற்றொரு பிரேரணை தயார்: கிரியெல்ல எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இப்போதே வந்துவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற சர்வதேச நாடுகளால் தேடப்படுபவர்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
"கடந்த இரண்டு வருடங்களாக ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக 90 நாடுகள் பேசின. அவற்றுள் 81 நாடுகள் இலங்கைக்கு எதிராகவே பேசின. இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரேரணை எதுவும் வராது என அரசு கூறித்திரிந்தது.
அதேபோன்றுதான் அடுத்த வருடமும் பிரேரணை கொண்டுவரப்படும். அப்பிரேரணை இப்போதே தயாராகிவிட்டது. காணாமல் போதல், மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல் மற்றும் பிரதம நீதியரசருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை போன்றவை தொடர்பாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக ஜெனிவாவில் பேசப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக இந்தியா அங்கு 200 அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. மஹிந்த சமரசிங்கவின் அறிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. மிகவும் இக்கட்டானதொரு நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடன் நட்பை வளர்ப்பதா அல்லது இல்லையா என்று இலங்கை அரசுதான் முடிவெடுக்க வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக