வடக்கு, கிழக்கு இணைப்பு ஜனநாயக விரோதமானது. 1982ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்காது. இந்த மாகாணசபையும் இருக்காது எனினும் 1987ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதி இந்த மாகாணசபை பலவந்தமாக எமக்கு திணிக்கப்பட்டுள்ளது வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களை குடியேற்றாமல் மயான பூமியில் வடமாகாண தேர்தலை நடத்த விடமாட்டோம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன 1987ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வகையிலேயே 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தம், இந்திய அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராக புலிகள் யுத்த பிரகடனம் செய்தனர்.
மாகாணசபையை நீக்கினால் பலர் பலியாகுவர் என எச்சரிக்கின்றனர். ஆனால் மாகாணசபை நிறுவப்பட்டதால் பலியான 68,000பேர் தொடர்பில் யாருமே பேசுவதில்லை. திவிநெகும சட்டமூலம் தொடர்பிலும் பிரச்சினை இருக்கிறது. மாகாணசபை முறைமையை நீக்கவேண்டுமானால் அந்த யோசனைக்கு மாகாணசபைகள் அனுமதியளிக்க வேண்டும்.
வடமாகாண சபை நிறுவப்பட்டால் இவ்வாறானதொரு யோசனைக்கு அனுமதி கிடைக்குமா? வடமாகாண சபையினால் முழுநாட்டின் அபிவிருத்திக்கும் பிரச்சினை ஏற்படும். ஐ.நா. இந்தியா மற்றும் சர்வதேசம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது.
வடக்கிலிருந்து 1971ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 20,000 சிங்களவர்கள் 1996ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 26,000 முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு மெனிக் முகாம்களில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்டோரை குடியமர்த்தியே வடமாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனை மீறி மயாண பூமியில் வடாமகாண சபை தேர்தலை நடத்த இடமளியோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக