இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு அரசு முயற்சி செய்வது ஏன்? இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் அரசுக்கு என்ன லாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் இந்தியாவினாலும், சர்வதேசப் பொலிஸாரினாலும் தேடப்படும் குற்றவாளிகள். இது இலங்கை அரசுக்கும் நன்குதெரியும். அதன் பின்னரும் அவர்களை தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு மஹிந்த தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.
12ஆயிரம் முன்னாள் போராகளை புனர்வாழ்வளித்து விடுதலைசெய்துள்ளோம் என்று அரசு கூறுகின்றது. ஆனால் சந்தேகத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் தடுத்து வைக்கபட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆயுதம் ஏந்தி போராடவில்லை. விடுதலைப் புலிகளுக்கு சிறுசிறு உதவிகளை வழங்கியதன் காரணமாகவே கைதுசெய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளும் பல வருடங்களாக எடுத்துக் கொள்ளப் படாமலுள்ளது.
எனவே, 12ஆயரிம் பேருக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளோம் எனக் கூறும் அரசு, புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புபடாதவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை.
அண்மையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்தனர். அவர்கள் சிறைச்சாலையில் நடந்துகொண்ட விதத்தை சரியென நான் கூற முற்படவில்லை. ஆனால், நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதன் காரணமாகத்தான் இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றது.
அதேவேளை, அரசு தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்துச் செயற்படவேண்டும் என்பதுடன், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கருமங்களை ஆற்றுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். வடமாகாண சபைத் தேர்தலுக்காக இந்தியாவால் தேடப்படும் இரண்டு குற்றவாளிகளை அரசு சிபாரிசு செய்துள்ளது என கூறப்படுகின்றது. ஏன் வடக்கில் வேறு பிரதிநிதிகள் இல்லையா? என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக