செவ்வாய், 6 நவம்பர், 2012

அனுமதியின்றி வெளிநாடு சென்றால் அமைச்சுப் பதவிகள் ரத்து ஜனாதிபதி எச்சரிக்கை


அனுமதியின்றி வெளிநாடு சென்றால் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அல்லது வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பங்கேற்காத ஆளும் கட்சி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவர்.
அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று வரையில் 18 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.
சிலர் அறிவிக்காமல் வெளிநாடு செல்வதாகவும் சிலர் ஓரிரு நாட்கள் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மாதக் கணக்கில் வெளிநாடுகளில் தங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறு அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டால் பதவி விலகியதாக கருத நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வாவும் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக