வெள்ளி, 9 நவம்பர், 2012

நீதியரசரை விமல் வீரவங்ச குழுவினர் விசாரிப்பதா? என்ன ஜனநாயகம்?

தலைமை நீதியரசரை பதவி நீக்கும் முயற்சியைக் கண்டித்து இலங்கையில் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டமொன்று
இலங்கையில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பில் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களுக்கு குற்றச்சாட்டுக்களை விசாரிக்கின்ற தகுதி இல்லை என்று சட்டத்தரணிகளின் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்முறை, இலங்கை சுதந்திரக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷ
கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டமொன்றில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.
அரசாங்க கட்சியினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தலைமை நீதியரசர் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தகுதி இல்லையென்று ஜனநாயக சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவர் சந்திரபால குமாரகே இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தெரிவுக்குழுவுக்கு ஆளுங்கட்சி நியமித்துள்ள விமல் வீரவங்ச, ராஜித்த சேனாரத்ன ஆகிய உறுப்பினர்களுக்கு எதிராக தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கடந்த காலங்களில் தீர்ப்புகளை அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சந்திரபால, இந்த அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழு மூலம் நீதியான விசாரணைகள் நடக்குமா என்பது சந்தேகத்துக்கு உரியது என்றும் கூறினார்.
இந்த ஆளுங்கட்சி தெரிவுக்குழு உறுப்பினர்களால் தலைமை நீதியரசர் பழிவாங்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்தார்.
அவ்வாறே, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒரு குற்றவாளி என்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஏற்கனவே அரச ஊடகங்களில் கருத்துவெளியிட்டுள்ளதாக ஜனநாயகத்தை காப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார்.
இவ்வாறான அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது கேலிக்கூத்தானது என்றும் சட்டத்தரணி ரத்னவேல் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக