வெள்ளி, 9 நவம்பர், 2012

யாழ்.ஊர்காவற்துறையில் அதிகரிக்கும் படைப்புலனாய்வாளர்களின் அட்டகாசம்! கடைகளின் முன்னால் மலர்வளையம்

யாழ். ஊர்காவல்துறையில் அதிகரித்துச் செல்லும் இராணுவப் புலனாய்வாளர்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து இன்று காலையும் மேற்படிப் பகுதியில் உள்ள சந்தைக் கட்டிடத்தில் உள்ள வியாபார நிலையங்களின் முன்னால் மலர்வளையம் வைத்து வர்த்தகர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.மேற்படிப் பகுதியில் உள்ள சுமார் 8 வியாபார நிலையங்களின் முன்பாகவும் இன்று காலை மலர்வளையம் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
குறித்த சந்தைக் கட்டிடத்தில் உள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கும் இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கும், உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் பெற வரும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பலத்த வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது.
இதற்கு காரணம் இராணுவப் புலானாய்வாளர்களுக்கு குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து மேற்படி வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளது.
காலை வியாபார நிலையத்தினை திறப்பதற்காக வந்த உரிமையாளர்கள் மலர்வளையத்தைக் கண்டு திகைப்படைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறை பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த பிரதேச சபை குப்பை வண்டில் மேற்படி மலர்வளையத்தை ஏற்றிச் சென்றுள்ளது என்று பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக