வியாழன், 1 நவம்பர், 2012

தீர்வு வழங்குமா இலங்கை? புரிந்து கொள்ளுமா உலகம்?


தீர்வு வழங்குமா இலங்கை? புரிந்து கொள்ளுமா உலகம்?


இலங்கையின் இறையாண்மையில் எந்த நாடும் தலையிட முடியாது என்று இறுமாப்பாக தெரிவித்துவரும் அரசாங்கம் தனது உச்சகட்ட சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக எதுவுமே இல்லாத 13ஆவது சட்டமூலத்தினை நீக்குவது தொடர்பிலான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு முற்பட்டிருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் தமிழினத்தின் மீது மேற்கொண்ட போர் வெற்றி கொடுத்த ஆணவத்தில் இருந்து அது இன்னமும் வெளிவரவேயில்லை.
இதன் வெளிப்பாடகவே சர்வதேசத்தினை மிரட்டுவதற்கும் சர்வதேச ஒழுங்குகளுக்கு கட்டுப்பட மறுப்பதற்கும் இலங்கை துணிந்திருக்கிறது.மக்களுக்காக அரசு என்ற நிலை மாறி குடும்பத்திற்காக அரசாங்கம் என்ற நிலையில் இலங்கையின் தலைவிதி மாறியிருக்கின்றது.
ஒவ்வொரு கட்டத்தில் இலங்கை மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது மட்டுமல்லாமல் இலங்கை மீது சர்வதேசம் மேற்கொண்ட அழுத்தங்களின் போதும் தனது தலையைக் கொடுத்தேனும் இலங்கையினைக் காப்பாற்றும் நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டு வந்திருந்தது.ஆனாலும் அநீதியின் பக்கம் தான் நின்றிருக்கின்றோம் என்று இந்தியாவே புரிந்து கொள்ளும் நிலையினை உணரவைப்பதற்கான நடவடிக்கையினை இலங்கை தற்போது கையிலெடுத்திருப்பதாகவே 13ஆவது சட்ட மூலம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்திருக்கின்றது.
இந்தியா இலங்கை தனது நட்பு நாடு என்று சொல்லிக்கொள்வதற்கு ஒரே ஒரு ஆதாரமாக எஞ்சியிருந்தது 13ஆவது திருத்தச் சட்டமூலம் மட்டுமே.
குறித்த சட்ட மூலம் அதனையும் நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முற்படுவது இந்தியாவை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என்ற இலங்கையின் செய்தியாகவே அதனைக் கொள்ளவேண்டும். காரணம் கடந்த காலங்களில் இந்தியாவின் முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும்போது இலங்கை – இந்திய தலைமை அதிகாரிகள் சந்திக்கின்ற போதிலோ 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கப் போகிறதும் 13ஆவது சட்டமூலத்திற்கு அதிகாரமான அதிகாரங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்நிலையில் தற்போது அரசாங்கம் பகிரங்கமாகவே இந்த விடயத்தினை வெளிப்படுத்தியிருப்பது அதன் உள்ளார்ந்த நோக்கத்தினை புலப்படுத்தியிருக்கின்றது.
குறித்த சட்டமூலம் தொடர்பிலான எதிர்ப்பலைகளை அரசாங்கத்தில் அங்கம் பெறும் இனவாதக் கட்சிகள் வெளிப்படுத்தியிருந்தன.
அதன் தொடராக இலங்கை அரசாங்கத்தின் தீர்மானிக்கும் நிலையில் இருக்கக்கூடிய மஹிந்த சகோதரர்களான பசில் மற்றும் கோத்தாபய ஆகியோர் சட்டமூலம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை வெளியிட்டிருக்கின்றனர்.
சட்டமூலம் தொடர்பிலான சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பலைகள் வெளியாகியிருந்த போது அதற்குச் சார்பாக அவர்கள் இருவரும் கருத்து வெளியிட்டிருப்பது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முடிவாகவே அவற்றினைப் பார்க்கமுடிகிறது.அதேபோல மாகாணங்களுக்கான அதிகாரங்களையும் பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது வசம் இருக்கின்ற மாகாணசபைகளின் ஊடாக அழிப்பதற்கான நடவடிக்கையினையும் அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டுவருகின்றது.மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நீக்குவதன் பிரதான நோக்கமேவடக்கு மாகாண சபையினை பிரதான இலக்காகக் கொண்டதே ஆகும்.
வடக்கு மாகாண சபையினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றும் என்பதாலும் அதன் தொடராக வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க முற்படலாம் என்ற முன் எச்சரிக்கை காரணமாகவுமே இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லா தொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்பதையே கடந்த அறுபது ஆண்டுகால வரலாறுகள் வெளிப்படுத்திவந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த சிங்கள அரசுகளின் பிரதிபலிப்பாகவே தற்போதைய இலங்கை அரசினைப் பார்க்க முடியும்.

அகிம்சை வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் போதும் சரி விடுதலைப் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட காலத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் சரி தற்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முன்னெடுக்கப் பட்டுவருகின்ற பேச்சுக்களின் போதும் சரி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் எதுவும் ஆளும் தரப்புக்களால் முன்னெடுக்கப் பட்டிருக்கவில்லை.

அது தற்போது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கருத்துக்களை வெளியிடுவதாக காட்டிக்கொள்கின்ற எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவை ஒருபோதும் சிறுபான்மை இன மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கின்றன.

சர்வதேசம் விடுத்த கோரிக்கைகள் எதனையும் இன்றுவரையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதாக வரலாறு இல்லை.

குறிப்பாக அண்மையில் ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு இந்தியா உட்பட்ட நாடுகளால் ஆதரிக்கப்பட்டு வெற்றிபெற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையினையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

தமிழினம் தன் இருப்பினை நிலைநாட்டுவதற்காக இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்களை மேற்கொண்டிருக்கின்றது.

அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்களை புரிந்திருக்கிறது. எண்ணிப்பார்க்க முடியாத இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது.

அநாதைகள் போல தெருத் தெருவாக தமிழ் மக்கள் செத்துவீழ்ந்தார்கள். எல்லாவற்றையும் இழந்தும் இன்றுவரையில் தமிழ் இனத்தின் விடுதலைக்கான தேவையை சர்வதேசம் புரிந்துகொண்டதாகவில்லை.

“மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் இறகு போடாது ” என்பார்கள்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்படப் போவதில்லை என்பதை சர்வதேசம் இனியும் கண்டும் காணாமல் இருக்கக்கூடாது என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக