திங்கள், 5 நவம்பர், 2012

இந்தியாவை சுற்றிவளைக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.: குற்றஞ்சாட்டுகின்றது 'றோ'!




பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான 'ஐ.எஸ்.ஐ.' அமைப்பு இலங்கை உட்பட இந்தியாவை அண்மித்த நாடுகளுடன் இணைந்து, இந்தியாவுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'றோ' அண்மையில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள இரகசிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


த ஏசியன் ஏஜ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இலங்கை, பஙகளாதேஸ், பர்மா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் தமது முகவர் நிலையங்களை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் மற்றும் வங்க தேச நாடுகளில், மேம்பாட்டு பணிகள் என்ற பெயரில் தன்னுடைய ஆட்களை குவித்துள்ள சீனாவிற்கு அடுத்தபடியாக, தற்போது பாகிஸ்தானும் இந்தியாவைச் சுற்றி தனது சதிச்செயல்களை செயல்படுத்த ஆட்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.

இது தொடர்பாக, இந்திய உளவு அமைப்பான "றோ" (ரிசர்ச் அண்டு அனலைசிங் விங்)வின் அறிக்கையில், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான நேபாளம், வங்கதேசம், பர்மா மற்றும் இலங்கை ஆகியவற்றில் இந்தியாவுக்கு எதிரான வேலைகளைச் செய்ய ஆட்களை பாகிஸ்தான் தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான சதிச்செயல்கள் தற்போது நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் குறைந்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானின் இந்த முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசம் மற்றும் நேபாளத்தில் இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.,யின் பார்வை இலங்கை மற்றும் பர்மாவை நோக்கி திரும்பியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக தமிம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் ஐகமிஷன் அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறப்படுகிறது. இதே போன்ற சதிச்செயலை, மற்ற நாடுகளிலும் செயல்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக ரா உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக