விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று கருதப்படும் ஒரு நபர் உட்பட, நால்வரை தமிழக கியூப் பிரிவினர் நேற்றைய தினம் அதிரடியாகக் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பல்லாவரம் என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டை சுற்றிவளைத்த கியூப் பிரிவின் சிறப்பு படைப்பிரிவு இக் கைதுகளை மேற்கொண்டுள்ளது. இதில் 2 வர் தப்பிவிட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. இலங்கையில் சமீபத்தில் கைதான 2 தமிழர்கள் வழங்கிய தகவல்களை, இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், தமிழக கியூப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்தே இக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சுரேஷ்குமார், உதயதாஸ், சுந்தரமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய நான்கு பேருமே கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆவர்.கைதுசெய்யப்பட்ட சுரேஷ்குமார், இரண்டு கால்களையும் இழந்தவர் என்றும், இவர் முன் நாள் போராளி என்றும் அறியப்படுகிறது. இலத்திரனியல் உபகரணங்களை இயக்கவல்ல இவர் ஒரு பொறியியலாளர் ஆவார். இதில் சுந்தரமூர்த்தி எனப்படும் நபர், ஒரு இந்தியர் எனவும், ஏனைய இருவரும் 2001ம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்கள் என்றும் கியூப் பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இளையோர் அமைப்பு என்னும் ஒரு அமைப்பை நிறுவி, அதனூடாக இலங்கையில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் வழங்கிய சில தகவல்களை, தமிழக கியூப் பிரிவு பொலிசார் இன்று இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு பரிமாறியுள்ளனர் என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளது. தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு பலத்த ஆதரவு காணப்படுவதும், அங்குள்ள பலம்வாய்ந்த பல அரசியல் கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது.ஆனால் தமிழக கட்டுப்பாட்டில் இயங்கும் கியூப் பிரிவு பொலிசார், கடந்த காலங்களிலும் சரி, தற்போதைய நிலையிலும் சரி, ஈழத் தமிழர்கள் மீது பல கட்டற்ற அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பலரை புலிகள் என்ற போர்வையில் கைதுசெய்தும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகத் தெரிவிக்கும் , இப் பிரிவு மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் தான் இயங்குவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுளதும் குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்டுப்பாட்டில், இப் பிரிவு இயங்க மறுக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக