திங்கள், 17 டிசம்பர், 2012

விமானத்தை வன்னியில் தரையிறக்க முயற்சித்தாராம் கே.பி.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டதாகப் புதுக்கதை விட்டுள்ளார் கேபி.இவர் கூறுபவற்றை மறுக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையின் இப்போதைய நிலை இல்லாமையினால் தான் நினைத்ததை எல்லாம் கூறலாம் என்கிற காரணத்தினால் நம்ப முடியாத கருத்துக்களைக் கூறி தமிழீழ விடுதலையின் மகிமையைக் குறைக்கும் செயலில் டுபட்டிருக்கிறார் கே.பி.

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் தான் புலம்பெயர் இடத்திலிருந்து கடினமாகப் பணியாற்றி எப்படியாவது விடுதலைப் புலித் தலைமையைக் காப்பாற்றி விடலாம் என்று முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி. கருணா, கே.பி., பிள்ளையான் போன்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து செயற்பட்டது மகிந்த அரசு.
இதற்கு இந்தியா உட்படப் பல நாடுகள் உறுதுணையாக இருந்தன என்பதே உண்மை நிலைவரம். இது இப்படியிருக்க,கே.பியின் தற்போதைய பேச்சுக்கள் வேடிக்கையாக இருக்கிறது. இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கிவந்த கே.பி. ஏதோ இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் தான் மனமுடைந்து, உடல் நலிவுற்று படுத்த படுக்கையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இறுதி யுத்தம் மும்மரமாக இருந்த வேளையில்தான் கே.பி. பல்வேறு விதமான கருத்துப் பரிமாறல்களைப் பல உலக ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் பத்திரமாக உயிருடன் இருப்பதாகத் தகவலை வெளியிட்டார். பின்னர் அடுத்த கணமே போர் முடிவுற்ற விட்டதாகவும் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் கூறினார். தானே விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்கிற பாணியில் செய்திகள் வெளிவர ஊக்குவித்ததுடன், நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதாகவும் அறிவித்தார்.
மனநிலை சரியில்லாமல் இருந்த ஒருவரினால் எப்படி மேற்கூறப்பட்டவற்றைத் தெரிவித்திருக்க முடியும் என்கிற கேள்வி எம்மில் பலரிடத்தில் எழுகிறது. மேற்கூறப்பட்ட சிந்தனைகள் அனைத்தும் மதிநுட்பம் உடையோரினாலேயே தெரிவிக்க முடியும். ஆக யாரோ பிறருடைய ஆலோசனையின்படிதான் கே.பி. செயலாற்றி இருந்துள்ளார் என்பதனை நேரடியாகவே ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப் பயணத்தை அடக்கி விடலாம் என்றே கங்கணம் கட்டிச் செயலாற்றியது சிங்களம். இதற்குத் துணைபோனவை இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் என்பது கே.பியின் பேட்டியின் மூலமாக உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக